

அன்று சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், நேற்று ஸ்ரேயஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் டெல்லி அணி வெற்றி பெற்றது, என்றாலும் அணியின் ஊக்கப் பயிற்சியாளர் திராவிட் அனுபவ வீரர்களை நம்பாதது ஏன் என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியின் இந்த வெற்றிகள் பெருமைக்குரியனவே தவிர பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போதுமானதல்ல என்கிறார் ஆகாஷ் சோப்ரா.
அதாவது டெல்லி அணியில் அனுபவ வீரர்கள் இல்லாததே அந்த அணியின் பின்னடைவுக்குக் காரணம் என்கிறார் ஆகாஷ்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “இளைஞர்களிடம் திறமையும் உள்ளது அதே வேளையில் சீரான முறையில் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. டெல்லி டேர் டெவில்ஸ் இளம் திறமைகளை நம்பி களமிறங்கியது ஆனால் அவர்களின் சீரற்ற தன்மையை பதிலீடு செய்ய அனுபவ வீரர்கள் இல்லை.
உங்கள் (திராவிட்) சிந்தனை அபாரமானது. ஆனால் ஐபிஎல் என்பது வெற்றி-தோல்விக்கான களம்” என்று பதிவிட்டுள்ளார்.
இளைஞர்கள் வளர்வதற்கான களமாக ஐபிஎல் கிரிக்கெட்டைப் பயன்படுத்தலாம் ஆனால் கடைசியில் இது வெற்றி-தோல்விக்கான தொடர் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும் என்று உணர்த்துகிறார் திராவிடை தன் ரோல் மாடலாகக் கொண்ட ஆகாஷ் சோப்ரா.