

மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் 19-வது ஒலிம்பிக் போட்டி 1968-ல் அக்டோபர் 12 முதல் 27 வரை நடைபெற்றது. வளர்ந்த நாடுகள் மட்டுமே நடத்தி வந்த ஒலிம்பிக்கை முதல் முறையாக வளரும் நாடான மெக்ஸிகோ சிறப்பாக நடத்திக் காட்டியது. மெக்ஸிகோவின் டி சோடேலோ ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஜோதியை ஏற்றிய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
அமெரிக்கா 45 தங்கம், 28 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. சோவியத் யூனியன் 29 தங்கம், 32 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 11 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
அல் ஒயர்டெர்
வட்டு எறிதல் போட்டியில் அமெரிக்காவின் அல் ஒயர்டெர் தொடர்ந்து 4-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் தடகளப் போட்டியில் தொடர்ந்து 4 தங்கம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
பாப் பீமோன்
நீளம் தாண்டுதலில் அமெரிக்காவின் பாப் பீமோன் 8.90 மீட்டர் தூரம் தாண்டி உலக சாதனை படைத்தார். இந்த சாதனை 23 ஆண்டுகளுக்குப் பின்னர், 1991-ல் அமெரிக்க வீரர் மைக் பாவேல்லால் முறியடிக்கப்பட்டது.
ஊக்கமருந்து
ஸ்வீடன் தடகள வீரர் ஹன்ஸ் குன்னர் ஊக்கமருந்து பயன்படுத்தியதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மது குடித்துவிட்டு மார்டன் பென்டத்லான் போட்டியில் கலந்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. விளையாட்டில் ஊக்கமருந்து சோதனை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சிக்கிய முதல் நபர் ஹன்ஸ்தான்.
எதிர்ப்பு
200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற கறுப்பின அமெரிக்க வீரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகியோர் மனித உரிமை மீறல், இன வெறி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கறுப்பு நிற கையுறை அணிந்து வந்திருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் நார்மனும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தார். இதற்காக டாமி ஸ்மித், ஜோன் கார்லோஸ் ஆகியோருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது. பீட்டர் நார்மன் அடுத்த ஒலிம்பிக் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.