"எங்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே" - வங்கதேச வீரர் தமீம் இக்பால்

"எங்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே" - வங்கதேச வீரர் தமீம் இக்பால்
Updated on
1 min read

எங்கள் அணிக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே என வங்கதேச துவக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் கூறியுள்ளார்.

வங்கதேச அணி சமீபத்தில் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் 6ஆம் இடத்துக்கு முன்னேறியது. 2015 உலகக் கோப்பையில் அவர்கள் ஆட்டம், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றது என கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இது குறித்து கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அணியில் விளையாடி வரும் தமீம் இக்பால் பேசுகையில், "ஒரு அணி தொடர்ந்து வெற்றி பெறும்போது, சிறந்த கிரிக்கெட் விளையாடும்போது மக்கள் கவனிக்க ஆரம்பிப்பார்கள், மதிப்பார்கள். எங்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்கள். ஒரு அணியாக நாங்கள் வெகு தூரம் கடந்து வந்துள்ளோம். அப்போது 10வது இடத்தில் இருந்து இப்போது 6ஆம் இடம் முன்னேறியுள்ளோம். நான் சொன்னதுபோல அது எளிதாக கிடைத்துவிடவில்லை.

பல தோல்விகளை, விமர்சனங்களைக் கடந்து, கடுமையாக உழைத்து வந்துள்ளோம். ஆனால் இதில் கடந்த 2 வருடங்கள் வங்கதேச கிரிக்கெட்டுக்கு சிறப்பான காலமாக அமைந்தது. இந்த 2 வருடங்களில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக நாங்கள் திகழ்ந்துள்ளோம்.

இதை மனதில் வைத்து தொடர்ந்து முன்னேறவேண்டும். நாங்கள் நன்றாக உழைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற சிறந்த அணிகளை தோற்கடித்து வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்நோக்குக்கின்றோம்.

இங்கிலாந்து எதிராக இதற்கு முன் சிறப்பாக ஆடியுள்ளோம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி ஆடுவது அவர்களது மண்ணில். அவர்கள் அணியில் சிறப்பான வீரர்கள் சிலர் இருக்கின்றனர். அந்த வெற்றியை நாங்கள் மீண்டும் பெற வேண்டும் என்றால் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்என அனைத்திலும் சிறந்து விளங்கவேண்டும். ஏனென்றால் இங்கிலாந்து மிக மிக வலிமையான அணி". இவ்வாறு தமீம் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in