Last Updated : 22 Nov, 2014 12:33 PM

 

Published : 22 Nov 2014 12:33 PM
Last Updated : 22 Nov 2014 12:33 PM

சரிதாவின் கணவர், பயிற்சியாளரிடம் விளக்கம் கேட்கிறது ஐபிஎஃப்

ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது குத்துச்சண்டை மேடை அருகே அனுமதியின்றி சென்றது தொடர்பாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவியின் கணவர் மற்றும் தனிப் பயிற்சியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் (ஐபிஎஃப்).

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (ஏஐபிஏ) நெருக்கு தலின் காரணமாகவே மேற்கண்ட நடவடிக்கையில் ஐபிஎஃப் இறங்கியுள்ளது.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, நடுவர் தனக்கு பாதகமாக நடந்து கொண்டதாகக் கூறி வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார். இதையடுத்து அவரை மட்டுமின்றி, இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிக் கான இந்திய விளையாட்டுக் குழுவின் தலைவர் சுமேரி வாலா உள்ளிட்டோரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது ஏஐபிஏ.

சரிதா தேவி மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்யக் கோரி சச்சின் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இப்போது அவருடைய கணவர் மற்றும் தனிப் பயிற்சியாளர் மீது நடவடிக்கை பாயவிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐபிஎஃப் தலைவர் சந்தீப் ஜஜோடியா கூறுகையில், “வாழ்நாள் தடை போன்ற அதிகபட்ச தண்டனையிலிருந்து சரிதா தேவியை காப்பாற்றுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டி ருக்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற ஏஐபிஏ கூட்டத்தின்போது எப்படிப்பட்ட சூழலில் சரிதா பதக்கத்தை உதறியிருப்பார் என்பது உள்ளிட்ட எல்லா விஷயங்கள் குறித்தும் நாங்கள் விளக்கமளித்தோம். சரிதாவின் கணவர் மற்றும் தனிப் பயிற்சியாளர் போட்டிக்கான அடையாள அட்டை பெறாதவர்கள். குத்துச்சண்டை மேடை அருகே அவர்களுக்கு வேலையில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்தித்து வருகிறோம். அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி யிருக்கிறோம் என ஏஐபிஏவிடம் தெரிவித்திருக்கிறோம். அதனால் சரிதாவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படாது என நம்புகிறோம். சரிதாவுக்கு எல்லா வழிகளிலும் உதவ இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முயற்சித்து வருகிறது” என்றார்.

இந்த நிலையில் சரிதாவின் கணவர் தோய்பா சிங் கூறுகையில், “எனக்கு இதுவரை எந்த நோட்டீஸும் வரவில்லை. ஏஐபிஏவிடம் இருந்து சாதகமான பதில் வரும் என நம்புகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பார்வையாளராக மட்டுமே சென்றிருந்தேன். எனது மனைவிக்கு ஆதரவாக நான் அங்iகு செல்லவில்லை. இந்திய குத்துச்சண்டை அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே அங்கு சென்றேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x