

டெல்லியில் நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுவதே ஆர்ஜென்டீனா அணியின் முதற்கட்ட இலக்கு என அதன் பயிற்சியாளர் ஜெனீரோ தெரிவித்துள்ளார்.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி டெல்லியில் வரும் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீன அணி டெல்லி வந்துள்ளது. பான் அமெரிக்கன் ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு இங்கு வந்துள்ள ஆர்ஜென்டீனா, 2-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்த நிலையில் பயிற்சியாளர் ஜெனீரோ மேலும் கூறியது:
2010-ம் ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக இந்தியா வருகிறேன். எங்கள் அணி நல்ல உத்வேகத்துடன் உள்ளது. போட்டியில் களமிறங்க தயாராக இருக்கிறது. இந்த உலகக் கோப்பை கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளோம். நாங்கள் உத்தியை வகுத்து பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். முதலில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் விளையாட வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு.
அனைத்து ஆட்டங்களும் சவால் நிறைந்ததாக இருக்கும். நாங்களும் எதிரணிகளுக்கு கடுமையான போட்டியை அளிப்போம். எங்கள் கேப்டன் கொன்ஸாலோ பெய்லட் வலிமை வாய்ந்தவர். அவர் 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஆர்ஜென்டீன அணியில் விளையாடியவர் என்றார்.
கேப்டன் கொன்ஸாலோ பெய்லட் கூறுகையில், “நாங்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இன்றைய பயிற்சி எங்களுக்கு நன்றாக அமைந்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறோம். அவர்கள் பலம் வாய்ந்த அணியினர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களைச் சந்திக்க நாங்கள் தயார். இதேபோல் ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகளும் எங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ளன” என்றார்.