

துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சானியா மிர்சா - பார்பரா ஸ்டிரைகோவா ஜோடி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாய் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - செக் குடியரசின் பார்பரா ஸ்டிரைகோவா ஜோடி, அமெரிக்காவின் அபிகெயில் ஸ்பியர்ஸ் - காத்தரினா ரெபோட்னிக் ஜோடியை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் சானியா -ஸ்டிரை கோவா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இப்போட்டி 1 மணிநேரம் 28 நிமிடங்கள் நீடித்தது. கடந்த வாரம் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றில் அபிகெயில் ஸ்பியர்ஸ் - காத்தரினா ரெபோட்னிக் ஜோடியிடம் சானியா - ஸ்டிரைகோவா ஜோடி தோல்வியடைந்தது குறிப்பிடத் தக்கது. அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இப்போது சானியா - ஸ்டிரைகோவா ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் காத்ரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியை எதிர்த்து இவர்கள் ஆடவுள்ளனர்.
டெல் போட்ரோ வெற்றி
மியாமியில் நடந்துவரும் ஏடிபி டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோ தகுதி பெற்றுள்ளார். நேற்று நடந்த கால் இறுதிக்கு முந்தைய போட்டியில் அவர் போஸ்னியாவின் டாமிர் சும்ஹரை 7-6, 4-6, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வீழ்த்தினார். கால் இறுதிச் சுற்றில் அவர் அமெரிக்காவின் குவேரியை எதிர்த்து ஆடவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு போட்டியில் குவேரி 6-2, 6-3 என்ற செட்கணக்கில் சக நாட்டவரான ஜாரெட் டொனால்ட்சனைத் தோற்கடித்தார்.