Published : 22 Feb 2017 01:23 PM
Last Updated : 22 Feb 2017 01:23 PM

டெய்லர் சதம்; போல்ட் அபாரம்: தென் ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றியை நிறுத்திய நியூஸி.

கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது.

இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 12 வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்ற தென் ஆப்பிரிக்காவின் வெற்றிப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைக்க அந்த அணியில் கேன் வில்லியம்சன், நீஷம் அரைசதம் எடுக்க ராஸ் டெய்லர் 102 ரன்கள் எடுத்தார், இதனால் நியூஸிலாந்து 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 42-வது ஓவரில் 214/8 என்ற நிலையிலிருந்து நியூஸிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 283 ரன்கள் வரை வந்து அச்சுறுத்தியது. ஆனால் தோல்வியடையக் காரணம், கடைசியில் ட்ரெண்ட் போல்ட், சவுதி ஆகியோர் தொடர்ச்சியாக 10 யார்க்கர்களை வீசினர். இதில் ரன் எடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர் பிரிடோரியஸ், பெலுக்வயோ திணறினர்.

உண்மையில் 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில் சவுதி 48வது ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனையடுத்து 2 ஓவர்களில் 20 ரன்கள் என்று தெனாப்பிரிக்காவுக்குச் சாதகமாக இருந்தது, அப்போது டிரெண்ட் போல்ட் 49-வது ஓவரில் யார்க்கராக வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்ததோடு, 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 அதிரடி ரன்கள் எடுத்த பிரிடோரியஸ் விக்கெட்டை பவுல்டு முறையில் வீழ்த்தினார்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் சவுதி, பெலுக்வயோவுக்கு தொடர்ச்சியாக 4 யார்க்கர்களை வீசி ரன் எடுக்க முடியாமல் செய்தார், கடைசி 2 பந்துகளில் பெலுக்வயோ பவுண்டரிகள் அடித்தும் பயனற்று போக தென் ஆப்பிரிக்கா 283/9 என்று தோல்வியுற்றது, நியூஸிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியின் தொடர் ஒருநாள் வெற்றிகளை நிறுத்தியது.

ராஸ் டெய்லர் இந்தச் சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களெடுத்த (17) நியூஸிலாந்து வீர்ரரானார், மேலும் 6,000 ரன்களை விரைவில் எடுத்த நியூஸிலாந்து வீரராகவும் ஆனார். நேதன் ஆஸ்ட்ல் 16 சதங்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இவரும் நீஷமும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 123 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர். நீஷம் 57 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுக்க, ராஸ் டெய்லர் 110 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா இல்லை.

டெய்லர், கேன் வில்லியம்சன் (69) ஜோடி 104 ரன்களைச் சேர்த்தனர், இது இவர்களது 11-வது சதக்கூட்டணியாகும். இந்தப் பிட்ச் சற்றே மந்தமடைந்ததால் இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளைப் போல் அல்லாமல் 300 ரன்களுக்கும் குறைவாக முடிந்தது.

ஹஷிம் ஆம்லாவை விளையாட முடியாத பந்தில் எல்.பி.செய்தார் சவுதி, டுபிளிசிசுக்கு ஒரு பந்தை கிராண்ட் ஹோம் உள்ளே ஸ்விங் செய்ய 11 ரன்களில் பவுல்டு ஆனார்.

டிவில்லியர்ஸுக்கு முன்பாகவே டுமினி 4-ம் நிலையில் இறக்கப்பட்டார். 34 ரன்கள் எடுத்த டுமினி, சாண்ட்னரின் பிளைட்டில் ஏமாந்தார். குவிண்டன் டி காக் 59 பந்துகளில் அரைசதம் கண்டு 57 ரன்களில் போல்ட் பந்தை நீஷமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மில்லர் 28 ரன்களில் சோதி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க டிவில்லியர்ஸ் 49 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தை புல் ஆட முயன்று மட்டையின் அடியில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

கிறிஸ் மோரிஸ் அருமையாக டீன் பிரவுன்லீயால் ரன் அவுட் செய்யப்பட்டார். பார்னெல், ஸாண்ட்னரிடம் எல்.பி.ஆனார். ஆனால் அதன் பிறகு பிரிடோரியஸ் (50), பெலுக்வயோ (29) ஆகியோர் 6 ஓவர்களில் 61 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை நியூசிலாந்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தனர். பிரிடோரியஸ் அதிரடி அரைசதத்தை 27 பந்துகளில் எடுத்து போல்ட்டிடம் பவுல்டு ஆக தென் ஆப்பிரிக்கா 283 ரன்களில் முடிந்து போனது.

டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், ஆட்ட நாயகனாக சதம் அடித்த டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x