

சர்வதேச அளவிலான படகுப் போட்டி சென்னையில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு படகு ஓட்டும் சங்கத்தின் கம்மோடார் அசோக் தாக்கர் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வா ய்க்கிழமை கூறியது: தமிழ்நாடு படகு ஓட்டும் சங்கம் சார்பில் “ரேமண்ட் இந்தியா சர்வதேச ரெகாட்டா 2013” என்ற பெயரில் நடைபெறும் இந்தப் படகுப் போட்டியில் இந்தியா, அயர்லாந்து, மலேசியா, நியூஸிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, சேஷல்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
அக்டோபர் 1-ம் தேதி பயிற்சிப் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஆப்டிமிஸ்ட், 29 யெர், லேசர் 4.7 ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டி ஒவ்வொன்றும் 12 ரேஸ்களை உள்ளடக்கியதாகும். அக்டோபர் 6-ம் தேதி அணி பிரிவு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் ஆப்டிமிஸ்ட் போட்டி 15 வயதுக்கு உட்பட்டோருக்கானது. மற்ற இரு போட்டிகளும் தனி நபர்களுக்கானது என்றனர்.
அப்போது பாய்மர படகின் மூலம் தனி ஒருவராக உலகை சுற்றி வந்த முதல் இந்தியரான லெப்டினென்ட் கமாண்டர் அபிலாஷ் டோமி, உதவி ரேஸ் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.