

சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் வரவிருக்கும் நிலையில் ஞாயிறன்று, சீனாவின் யூ சுன் என்பவரை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாய்னா நெவால் நடப்பு சீசனின் முதல் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதனையடுத்து சாய்னா நெவாலுக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்து ட்வீட்டில், “வாழ்த்துக்கள் சாய்னா. உங்கள் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதுமே முன்னேற்றம்.. பிரவுட் இந்தியன்” என்று கூறியிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த சாய்னா நெவால், “உங்களைப் போன்றே இன்னும் ஆக்ரோஷமாக ஆடி நிறைய போட்டிகளை வெல்ல நான் கடுமையாக முயற்சி செய்து வருகிறேன், மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற சாய்னா நெவால், ஆகஸ்டில் ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ரசிகர்களின் தங்கக் கனவை சுமந்து செல்கிறார்.