

மும்பையில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஏ வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தொடக்க வீரர்கள் வார்னர் (25), ரென்ஷா (11) ஆகியோரை வீழ்த்தினார். கேப்டன் ஸ்மித் 31 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
டெல்லி அணியைச் சேர்ந்த நவ்திப் சைனி அருமையாக வீசி 6 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பசுந்தரை ஆட்டக்களத்தில் அதிரடி வீரர் வார்னர் மற்றும் ரென்ஷா ஆகியோர் எச்சரிக்கையுடன் ஆடினர், கேப்டன் பாண்டியா, அசோக் டிண்டா ஆகியோர் தொடக்க ஓவர்களில் சில பந்துகளில் வார்னர், ரென்ஷாவை பீட் செய்தனர். ஒரு முறை இருவரும் ஸ்லிப் வழியாக அடிக்க நேர்ந்தது. ஆனாலும் தளர்வான பந்துகளை வார்னர் பவுண்டரிக்கு விரட்டினார்.
டிண்டா 4 ஓவர்கள் வீசிய பிறகு நவ்தீப் சைனி பந்து வீச வந்தார், டெல்லி மீடியம் பேஸ் பவுலரான இவர் ஷார்ட் பிட்ச் பந்தில் வார்னரை வீழ்த்தினார், வார்னர் அந்தப் பந்தை புல் ஆட முயன்று டாப் எட்ஜ் எடுக்க விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கேட்ச் எடுத்தார்.
வார்னரின் 25 ரன்கள் 43 பந்துகளில் வந்தது. ஸ்மித் களமிறங்கி தன்னம்பிக்கையுடன் ஆடத் தொடங்கினார். மிட் ஆன், மிட் ஆஃபில் ஸ்மித் வேகப்பந்து வீச்சாளர்களை அருமையாக ட்ரைவ் செய்தார். ரென்ஷா 34 பந்துகளில் 9 ரன்கள் என்று தடைகளுடன ஆடி வந்த நிலையில் மீண்டும் சைனி, ரென்ஷாவின் எட்ஜைப் பிடித்தார் மீண்டும் இஷான் கிஷன் கேட்ச் ரென்ஷா வெளியேறினார்.