Published : 23 May 2017 08:25 AM
Last Updated : 23 May 2017 08:25 AM

ஐபிஎல் திருவிழாவில் நம்பிக்கை தந்த இந்திய இளசுகள்

ஐபிஎல் 10-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் இரவுடன் கோலாகலமாக நிறை வடைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி 3-வது முறையாக மகுடம் சூடி சாதனை படைத்துள்ளது.

வழக்கம்போல் இந்த சீசனிலும் பரபரப் புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்த போட்டி களின் எண்ணிக்கை ஒரு டஜனை தாண்டி உள்ளது. இந்த தொடரின் வாயிலாக இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சில நல்ல விஷயங் களும், எதிர்வினை விஷயங்களும் இதோ....

மிரட்டல் வேகங்கள்

இந்த சீசனில் இந்திய அணிக்காக விளையாடி வீரர்கள் மட்டுமின்றி உள்ளூர் அணிக்காக விளை யாடிய பல வீரர்கள் பந்து வீச்சு, பேட்டிங்கில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதிலும் முக்கியமாக வேகப்பந்து வீச்சில் இளம் வீரர்கள் சில ஆட்டங்களில் ஆதிக்கவாதிகளாகவும் செயலாற்றினர்.

கடந்த சீசனை போலவே அபாரமாக செயல்பட்ட புவனேஷ்வர் குமார் இம்முறை 14 ஆட்டங்களில் 26 விக்கெட்களை வேட்டையாடி னார். ஜஸ்பிரித் பும்ரா (20), உமேஷ் யாதவ் (17) விக்கெட்கள் கைப்பற்றினர்.

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர்க ளாக திகழும் இவர்களுக்கு சளைக்காத வகையில் ஜெயதேவ் உனத்கட்(24), சந்தீப் சர்மா (17), மோகித் சர்மா(13), சித்தார்த் கவுல்(16), முகமது சிராஜ் (10), ஷர்துல் தாக்குர் (11) விக்கெட்களை வீழ்த்தி னர். இவர்களில் சிராஜூக்கு 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதிகம் அறியப்படாத பாசில் தம்பி(11), அனிகெட் சவுத்ரி(5) உடன் ஒரு ஆட்டத்தில் மட்டுமே களமிறக்கப்பட்ட அவேஷ் கான் ஆகி யோரும் தங்களது சீரான வேகம், வித்தியாசமான கோணங்களில் சிறப்பாகவே வீசினர். இதன் மூலம் வரும் காலங்களில் இந்திய அணிக்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்க வழிகள் உருவாகி உள்ளன.

சுழல்

அதேவேளையில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய லெக் ஸ்பின்னர்கள் சோபிக்கத் தவறினர். அமித் மிஸ்ரா10, கரண் சர்மா 13, ராகுல் டிவாட்டியா 3 விக்கெட்களே கைப்பற்ற முடிந்தது. இவர்களில் மிஸ்ரா 14 ஆட்டத்திலும், கரண் சர்மா 9 ஆட்டத்திலும், டிவாட்டியா 3 ஆட்டங்களிலும் விளையாடியிருந்தனர்.

அதேவேளையில் தென் ஆப்ரிக்காவின் இம்ரன் தகிர் 18, ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் 17 விக்கெட்கள் விக்கெட்கள் வீழ்த்தினர். இம்ரன் தகிர் இந்த சீசனில் ஆரம்பத்தில் விலை போகாத வீரராக இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. ரஷித் கான் தனது கூக்ளியால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அதிலும் அவரது பந்து வீச்சு பாணி சில சமயங்களில் நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் கிறிஸ் ஹாரிஸை ஞாபகப்படுத்தும் வகையில் இருந்தது.

மதிப்புமிக்க ஸ்டோக்ஸ்

இந்த சீசனில் அதிக தொகைக்கு (ரூ.14.5 கோடி) புனே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் மதிப்பு மிக்க வீரராகவும் தேர்வாகி உள்ளார். இந்த சீசனில் இங்கிலாந்து வீரர்களில் அதிகம் பிரகாசித்த வீரரும் இவர் தான். 12 ஆட்டத்தில் பங்கேற்ற அவர் தலா ஒரு சதம், அரை சதம் உட்பட 316 ரன்களும், 12 விக்கெட்களும் கைப்பற்றினார். ஒரு அபாரமான கேட்ச் மற்றும் ஒரு சில ரன் அவுட்களையும் அவர் செய்துள்ளார்.

விடியும் வரை..

இந்த சீசனில் அனைவராலும் விமர்சிக்கப் பட்டது பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டம் தான். ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மழை காரணமாக நள்ளிரவு 12.55 மணிக்கு 2-வது பேட்டிங் தொடங்கப்பட்டது. 6 ஓவர்களில் 48 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப் பட்ட இந்த ஆட்டம் அதிகாலை 1.27 மணிக்கு தான் முடிவடைந்தது.

கூர்மை எங்கே?

இந்த சீசனில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தோனியை அணி நிர்வாகம் கடுமையாக சீண்டியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். எனினும் இறுதிப் போட்டிக்கு முன்பாக கூட புனே அணியின் உரிமையாளரான சஞ்ஜீவ் கோயங்கா, தோனியை விட புத்தி கூர்மையில் ஸ்மித் மிகச்சிறந்தவர் என புகழ்பாடினார்.

ஆனால் இறுதிப்போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டத்தில் இருந்த புனே அணி தோல்வியை தழுவ ஸ்மித் முக்கிய காரணமாக இருந்தார். குறைந்த இலக்கு (130) கொண்ட இந்த ஆட்டத்தில் ஸ்மித் 50 பந்துகளுக்கு 51 ரன்கள் சேர்த்தார். 3-வது ஓவரின் 3-வது பந்தில் களமிறங்கிய அவர் கடைசி ஓவரின் 3-வது பந்து வரை களத்தில் நின்றும் வெற்றியை வசப்படுத்த தவறினார்.

பரபரப்பான ஆட்டங்கள்

இந்த சீசனில் 59 ஆட்டங்களில் 19 ஆட்டங்கள் மிகவும் பரபரப்பு வாய்ந்தவையாக அமைந்தது. இந்த 19 ஆட்டங்களிலும் இறுதி ஓவரில்தான் வெற்றி வசப்படுத்தப்பட்டது. மும்பை அணி அதிகபட்சமாக 9 ஆட்டங்களில் கடைசி ஓவர்களில் தான் வெற்றி பெற்றது.

அந்த அணி வெற்றி பெற்ற ஆட்டங்களிலும் சரி, தோல்வியை தழுவிய ஆட்டங்களிலும் சரி தனது ரசிகர்களைக் கடைசி ஓவரில் இருக்கை நுனிக்கே கொண்டு வந்தது. இந்த வகையில் குஜராத் அணிக்கு எதிராக டையில் முடிவடைந்த ராஜ்கோட் போட்டியில் பும்ரா சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடிக்கொடுத்தார்.

நடுவர்கள் மோசம்...

இந்த சீசனில் பல்வேறு ஆட்டங்களில் நடுவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. பெரும்பாலான சமயங்களில் தெளிவாக தெரிந்தும் எல்பிடபிள்யூ முறையில் அவுட்கள் வழங்க மறுக்கப்பட்டது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது.

மேலும் வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வார்னர் ஒரு ஓவரின் கடைசி பந்தில் பவுண்ட்ரி அடித்தார். ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். இது நடுவர்கள் செய்த தவறின் உச்ச கட்டமாகவும் அமைந்தது.

நடராஜன் ஏமாற்றம்

தமிழக வேகப் பந்து வீச்சாளரான நடராஜன் இந்த சீசனில் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். 6 ஆட்டத்தில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் சிறந்த திறனை வெளிப்படுத்த அவர் தவறினார். 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றிய அவர் ஓவருக்கு சராசரியாக 9.07 ரன்களை வழங்கினார்.

இளம் பேட்டிங் படை

இளம் இந்திய வீரர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், நித்திஷ் ராணா, ராகுல் திரிபாதி ஆகியோர் இந்த சீசனில் பேட்டிங்கில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

குஜராத் அணிக்கு எதிராக 43 பந்துகளில், 9 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் விளாசி ஓரேநாள் இரவில் சச்சின் உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்களின் பாராட்டை வெகுவாக பெற்றார் ரிஷப் பந்த்.

மற்றொரு டெல்லி வீரரான சஞ்சு சாம்சன் ஒரு சதம் உட்பட 386 ரன்கள் இந்த சீசனில் குவித்தார். ராகுல் திரிபாதி (391), ஸ்ரேயஸ் ஐயர் (338), நித்திஷ் ராணா (333) ஆகியோரும் அதிரடியாக விளையாட தவறவில்லை.

ஆல்ரவுண்டரான மும்பை வீரர் கிருணல் பாண்டியா பேட்டிங்கில் 243 ரன்களும், பந்து வீச்சில் 10 விக்கெட்களும் வீழ்த்தி அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

வாஷிங்டன் சுந்தர்

அஸ்வினுக்கு பதிலாக புனே அணியில் இடம் பெற்ற 19 வயதான வாஷிங்டன் சுந்தர் இந்த சீசனில் 11 ஆட்டத்தில் 8 விக்கெட்கள் கைப்பற்றினார். ஓவருக்கு சராசரியாக 6.16 ரன்கள் வழங்கினார். பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் பிளே ஆப் சுற்றில் மும்பைக்கு எதிராக 16 ரன்களுக்கு 3 விக்கெட்கள் கைப்பற்றி சிறப்பான பந்து வீச்சைப் பதிவு செய்தார்.

வாய்ப்புகள் இல்லை

டெல்லி அணிக்காக ரூ.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வினுக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிறந்து தமிழகத்தின் ஓசூரில் வாழும் சஞ்சய் யாதவ் (கொல்கத்தா அணி) என்பவருக்கும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சூதாட்ட நிழல்

இந்த சீசனில் குஜராத், டெல்லி அணி வீரர்கள் தங்கியிருந்த கான்பூர் ஓட்டலில் வைத்து சூதாட்டக்காரர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் குஜராத் வீரர்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பிசிசிஐ இதை மறுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x