

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிச்சுற்றில் நுழைந்தது. இதனால் இந்தியாவின் இறுதிச்சுற்று வாய்ப்பு தகர்ந்தது.
மிர்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் அனாமுல் ஹக்-இம்ருள் கெய்ஸ் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. அனாமுல் ஹக் 55 பந்துகளிலும், இம்ருள் கெய்ஸ் 62 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.4 ஓவர்களில் 150 ரன்கள் சேர்த்தது.
75 பந்துகளைச் சந்தித்த கெய்ஸ் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, மோமினுல் ஹக் களம்புகுந்தார். அவர் அதிரடியாக விளையாட, மறுமுனையில் நிதானமாக ஆடிய அனாமுல் ஹக் 131 பந்துகளில் சதம் கண்டார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 2-வது சதம் இது. எனினும் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மோமினுல் ஹக்குடன் இணைந்தார் கேப்டன் முஷ்பிகர் ரஹிம். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 5.1 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்தது. மோமினுல் ஹக் 47 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷகிப் அல்ஹசன் களம்புகுந்தார். வந்த வேகத்தில் வெளுத்து வாங்கிய அல்ஹசன் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் சேர்க்க, வங்கதேசம் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. கேப்டன் முஷ்பிகர் ரஹிம் 33 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.
கடைசி 10 ஓவர்களில் மட்டும் 121 ரன்கள் சேர்த்த வங்கதேசம், ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது. 327 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ்-அஹமது ஷெஸாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 20.4 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தது. 55 பந்துகளைச் சந்தித்த ஹபீஸ் 52 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் மிஸ்பா உல் ஹக் 4, சோயிப் மசூத் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஷெஸாத்துடன் இணைந்தார் பவாட் ஆலம். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. அஹமது ஷெஸாத் 123 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரெஹ்மான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆலமுடன் இணைந்தார் அப்ரிதி. அப்போது பாகிஸ்தானின் வெற்றிக்கு 52 பந்துகளில் 102 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசிய அப்ரிதி, ஷகிப் அல்ஹசன் வீசிய அடுத்த ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 18 பந்துகளில் அரைசதம் கண்ட அப்ரிதி, 52 ரன்களில் கொடுத்த கேட்ச்சை கேப்டன் முஷ்பிகர் ரஹிம் கோட்டைவிட, வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை விளாசிய அப்ரிதி, அடுத்த பந்தில் ரன் அவுட்டானார். அவர் 25 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து உமர் அக்மல் களம்புகுந்தார். மறுமுனையில் ஆலம் இரு சிக்ஸர்களை விளாசினார். 49-வது ஓவரின் 4-வது பந்தில் ஆலம் ரன் அவுட்டானார். அவர் 70 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 5-வது பந்தில் உமர் அக்மல் பவுண்டரி அடிக்க, பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஒருநாள் போட்டியில் இதுதான் பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸ் வெற்றி.இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்த இந்தியா, இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இது சம்பிரதாய ஆட்டம்தான்.