

குஜராத் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்துவீச கடந்த சில நாட்களாக செய்துவந்த கடும் பயிற்சியே காரணம் என்று மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் இஷான் கிஷன் அதிகபட்சமாக 48 ரன்களை விளாசினார். மும்பை அணியில் குருனால் பாண்டியா 3 விக்கெட்களையும்,மலிங்கா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் பார்த்தீவ் படேல் அதிகபட்சமாக 70 ரன்களைச் சேர்த்தார். குஜராத் அணியில் பசில் தம்பி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் பாக்னர் வீசிய ஓவரில் மும்பை அணி 11 ரன்களைச் சேர்த்தது. இதைத்தொடர்ந்து மும்பை அணிக்காக பும்ரா, சூப்பர் ஓவரை வீசினார். இந்த ஓவரில் குஜராத் பேட்ஸ்மேன்களால் 6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து மும்பை பந்து வீச்சாளர் பும்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
மலிங்காவுடன் சேர்ந்து கடந்த பல நாட்களாக நான் கடும் பயிற்சி செய்துவந்தேன். குறிப்பாக யார்க்கர் பந்துகளை வீசுவதில் அதிக கவனம் செலுத்திவந்தேன். அந்த பயிற்சிதான் குஜராத் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்துவீச உதவியது.
சூப்பர் ஓவரை வீசுவதற்கு முன் என்னிடம் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இதை சூப்பர் ஓவர் என்று கருதாமல் சாதாரண ஓவராக நினைத்து நம்பிக்கையுடன் பந்துவீசு. நெருக்கடியை மனதில் ஏற்றிக்கொள்ளாதே” என்றார். நான் சூப்பர் ஓவரை வீசுவது இதுவே முதல் முறையாகும். அதிலும் 11 ரன்களுக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது கடினமான சவாலாக இருந்தது. இருப்பினும் எங்கள் அணி வகுத்த திட்டப்படி பந்துவீசி குஜராத் அணியை கட்டுப்படுத்தினேன். இப்போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு பும்ரா கூறினார்.