

கேப்டன் தோனியின் ஆதரவாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் மீதும் தேர்வுக்குழுவினர் கவனம் செலுத்தினால் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: டெஸ்ட், ஒருநாள் போட்டி என இரு அணிகளிலுமே ஹர்பஜன் சிங் மீண்டும் இடம்பிடிக்கலாம் என நினைக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். கேப்டன் தோனியின் விருப்பத்தின் பேரிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால் ஹர்பஜன் சிங்குக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
தோனியின் ஆதரவாளர்கள் சூழ்ந்திருப்பதால் தேர்வுக்குழுவினரும் ஹர்பஜன் சிங்கைப் பற்றி சிந்திப்பதில்லை என்றார். ஆசிய கோப்பை மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜாவிற்குப் பதிலாக இந்திய அணியில் அமித் மிஸ்ராவை சேர்த்திருப்பது ஏற்கக்கூடியதல்ல என்று குறிப்பிட்ட கங்குலி, “மிஸ்ரா சராசரியான சுழற்பந்து வீச்சாளர்தான். அவர் தனது கையிலிருந்து பந்தை வெளிவிடும்போது அது மெதுவாகவே செல்கிறது. அதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாகக் கணித்து அடித்துவிடுகிறார்கள்.
அவரால் எதிரணியின் பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்துவது கடினம். நாக்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், மிஸ்ராவின் பந்துவீச்சை எப்படி வெளுத்து வாங்கினார் என்பதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். மிஸ்ராவின் பீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படியில்லை.
அவர் ஆசிய கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என உங்களுக்கு உறுதிகூற முடியாது. ஏனெனில் ஆசிய கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளுக்குமே சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியும். அப்படியிருக்கையில் ஹர்பஜன், ஓஜாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மிஸ்ராவுக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அது ஆச்சரியமளிப்பதாக உள்ளது” என்றார்.