

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி கண்டார்.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-19, 6-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், நடப்பு உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்கிடம் தோல்வி கண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த், பின்னர் கடுமை யாகப் போராடி 2-வது செட்டை கைப்பற்றினார். எனினும் 3-வது செட்டில் சென் லாங்கின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால் அந்த செட்டை மிக எளிதாக 6-21 என்ற கணக்கில் இழந்து தோல்வி கண்டார் ஸ்ரீகாந்த்.
கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சென் லாங்கை சந்தித்த ஸ்ரீகாந்த் அதிலும் தோல்வி கண்டார். எனினும் அந்த ஆட்டத்தோடு ஒப்பிடும்போது தற்போது சிறப்பாகவே விளையாடியுள்ளார். கடந்த வாரம் சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த ஸ்ரீகாந்த், சர்வதேச தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்ததுகுறிப்பிடத்தக்கது.