

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா - உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூருவில் இந்த ஆட்டம் வரும் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இதில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் மூத்த வீரரரான லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார். போட்டியில் களமிறங்கும் 4 வீரர்களில் ஒருவராக அவர் இடம் பெறவில்லை. இந்த முடிவை இந்திய அணியின் நான் பிளேயிங் (விளையாடாத) கேப்டனான மகேஷ் பூபதி எடுத்துள்ளார்.
இந்திய அணி சார்பில் ராம் குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஷ்வரன், ராம் பாலாஜி, ரோகன் போபண்ணா ஆகியோர் களமிறங்குவார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த தொடருக்காக அறிவிக்கப் பட்ட அணியில் பயஸ் மற்றும் ரோகன் போபண்ணா மாற்று வீரர்களாகவே இடம் பெற்றிருந்த னர்.
இந்நிலையில் சிலதினங் களுக்கு முன்பு காயம் காரணமாக யூகி பாம்ப்ரி விலகினார். இதனால் அவருக்கு பதிலாக பயஸை தவிர்த்து ரோகன் போபண்ணாவை தேர்வு செய்துள்ளார் மகேஷ் பூபதி. இரட்டையர் பிரிவில் பாலாஜியுடன் இணைந்து ரோகன் போபண்ணா களமிறங்க உள்ளார்.
டேவிஸ் கோப்பையில் இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளன.
இன்று ஒற்றையர் பிரிவில் இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.