Published : 08 Nov 2014 09:24 AM
Last Updated : 08 Nov 2014 09:24 AM

சச்சினை அச்சுறுத்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து மிரண்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சுயசரிதையில் (பிளேயிங் இட் மை வே) அவர் மேலும் கூறியிருப்பதாவது:

1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அப்போதைய தலைசிறந்த பந்துவீச்சாளர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் உள்ளிட்டோரின் பந்துவீச்சை எதிர்கொண்டது எனக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது. அப்போது எனக்குள் ஏற்பட்ட பயத்தால் என் திறமையின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் திறமை நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நான் அறிமுகமானேன் என்பது இன்னும் முக்கியமானது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆகிப் ஜாவேத் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், முஷ்டாக் அஹமது, அப்துல் காதிர் போன்ற லெக் பின்னர்களும் வீசிய பந்தை எதிர்கொண்டேன். எந்தவொரு அறிமுக வீரருக்குமே மேற்கண்ட வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடுமையான சோதனைதான் என குறிப்பிட்டுள்ளார்.

அதிரவைத்த அக்ரம்

தனது முதல் தொடரான பாகிஸ்தான் தொடரில் வாசிம் அக்ரமின் மிரட்டல் பந்துவீச்சு குறித்தும், தான் டெஸ்ட் போட்டிக்கு வரவேற்கப்பட்ட அனுபவம் குறித்தும் எழுதியுள்ள சச்சின், “அக்ரம் வீசிய ஓவரின் 3-வது பந்தை நான் எதிர்கொண்டேன். அது மிக மோசமான பவுன்சராக வந்தது. அதைப் பார்த்த நான் அடுத்த பந்து துல்லியமான யார்க்கராக இருக்கலாம் என்று நினைத்து அதை எதிர்கொள்ள தயாராகியிருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. 4-வது பந்தும் பவுன்சராகவே வந்தது. அடுத்த இரு பந்துகள் யார்க்கராக இருக்கலாம் என எதிர்பார்த்தேன். ஆனால் அதுவும் பவுன்சராகவே வந்தது. அந்த ஓவரின் முடிவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வருக வருக என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

மூக்கை உடைத்த யூனிஸ்

வக்கார் யூனிஸ் வீசிய பந்து தனது மூக்கை உடைத்ததை நினைவுகூர்ந்துள்ள சச்சின், வக்கார் யூனிஸ் வீசிய பந்து நான் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக 6 இஞ்ச் பவுன்சராகி ஹெல்மெட்டில் பட்டு எனது மூக்கை பதம்பார்த்தது. அப்போது எனது பார்வை மங்கலானது. தலை மிகவும் கனமானதைப் போன்று உணர்ந்தேன். எனது மூக்கை உடைத்த பந்து பின்னர் ஸ்லிப் திசைக்கு சென்றது. அதன்பிறகுதான் எனது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டுவதை பார்த்தேன்.

அப்போது மனரீதியாக எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், உங்கள் மூக்கு உடைந்துவிட்டது. நீங்கள் மருத்துவமனைக்கு போகலாம் என ஜாவேத் மியான்தத் கூறியதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தேன். அப்போது கேலரியில் இருந்த ஒரு பேனரில், என்னை கிண்டல் செய்யும் வகையில் “குழந்தையே வீட்டுக்கு போய் பால் குடி” என எழுதப்பட்டிருந்த வாசகம் எனக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்

கராச்சி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது திடீரென களத்திற்குள் புகுந்த ஒருவர் கபில்தேவ், மனோஜ் பிரபாகர் ஆகியோரை திட்டிவிட்டு, கேப்டன் ஸ்ரீகாந்தை தாக்க முயன்றார். அப்போது ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக பாயிண்ட் திசையில் நின்ற எனக்கு பயம் ஏற்பட்டது. அந்த நபர் என்னை நோக்கி வந்தால் என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக டிரெஸ்ஸிங் அறையை நோக்கி ஓடுவதற்கு தயாராக இருந்தேன். அப்போதுதான் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியின் தீவிரம் குறித்து தெரிந்துகொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சச்சினுக்கு பிடித்த அதிக எடை கொண்ட பேட்

சச்சின் காயத்தால் அவதிப்பட்டபோதெல்லாம் அவர் வைத்திருந்த அதிக எடை கொண்ட பேட் காரணமாக இருக்கலாம் என்று பெரிய அளவில் பேசப்பட்டன. ஆனால் அவரோ குறைவான எடை கொண்ட பேட் தனக்கு வசதியாக இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.

நான் குறைவான எடை கொண்ட பேட்டை பயன்படுத்த முயன்றபோதெல்லாம் அது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால் பாதிப்புதான் ஏற்பட்டது. அதிக எடை கொண்ட பேட் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், சில நேரங்களில் எடை குறைவான பேட்டை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டேன். நான் மீண்டும் அதை முயற்சித்தேன். ஆனால் அது எனக்கு ஒத்துவரவில்லை. ஏனெனில் எனது முழு பேட்டும் எடையைப் பொறுத்துதான் சுழலும். நான் டிரைவ் ஷாட்களை ஆடுகிறபோது அதற்கு ஆற்றல் கொடுக்க அதிக எடை தேவைப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x