

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் இன்று தொடங்கிய ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 309 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீரர் ரோஹித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 171 ரன்களை எடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவன், ரோஹித் சர்மா களமிறங்கினர்.
ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்தியா நிதான ஆட்டத்தையே கடைபிடித்தது. 22 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த ஷிகர் தவன் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். நிலைத்து ஆடிய இந்த இணை 122 பந்துகளில் 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது.
இந்தப் போட்டிக்கான ஆஸி. அணியில், ஹேசல்வுட், மிட்சல் மார்ஷ் தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் அனுபவமில்லாதவர்கள். இது இந்திய அணியின் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. 63 பந்துகளில் அரை சதம் கடந்த ரோஹித் சர்மா 122 பந்துகளில் சதத்தை எட்டினார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம். மறுமுனையில் கோலி 61 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
ஒரு ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு குறையாமல் ரன் சேர்த்த சர்மா - கோலி இணை 218 பந்துகளில் 200 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது.
45-வது ஓவரில், விராட் கோலி, ஃபால்க்னர் வீசிய பந்தை லாங் ஆன் திசைக்கு விரட்ட, அது ஃபின்ச்சின் கைகளில் தஞ்சமடைந்தது. சதத்தை தவறவிட்ட கோலி 97 பந்துகளில் 91 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 9 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடக்கம்.
இதற்குப் பின் ஆட வந்த கேப்டன் தோனி, தான் சந்தித்த 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 5 ஓவர்களே மீதமிருந்த நிலையில் ரோஹித் சர்மாவும் அதிரடி ஆட்டத்துக்கு மாறினார். அவர் 155 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். மறுமுனையில் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த தோனி, ஃபால்க்னர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் இந்தியா எடுத்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் (163 பந்துகள், 13 பவுண்டரி, 7 சிக்ஸர்) எடுத்திருந்தார். கடைசி ஓவரில் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோஹித் சர்மா, 3-வது பந்தை சிக்ஸருக்கு விளாச, பந்து பவுண்டரியைத் தாண்டி பறந்த அதே நேரத்தில் ரோஹித் சர்மாவின் பேட் உடைந்தது குறிப்பிடத்தக்கது.
19 போட்டிகளில் 1000 ரன்கள் கடந்த ரோஹித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த போட்டிகளில் (19 போட்டிகளில் ) 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையை இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா பெற்றார். இதற்கு முன் இந்த பெருமையைப் பெற்றிருந்த லாரா, டெண்டுல்கர் ஆகியோரை ரோஹித் சர்மா கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.