Published : 18 Feb 2014 09:52 AM
Last Updated : 18 Feb 2014 09:52 AM

குல்தீப் ஹாட்ரிக்; காலிறுதியில் இந்தியா

துபையில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடியது ஸ்காட்லாந்து. இதனால் அந்த அணியின் முதல் 8 வீரர்களில் 5 பேர் ஒற்றை இலக்க ரன்களிலும், 2 பேர் டக் அவுட்டும் ஆகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தனிநபராகப் போராடிய தொடக்க ஆட்டக்காரர் ஏ.ஆர்.ஐ. உமீத் 77 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக ஜி.டி.மெயின் 16 ரன்களில் ஆட்டமிழக்க, 29.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து.

குல்தீப் ஹாட்ரிக்

19-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் ஸ்காட்லாந்தின் ஃபரார், ஸ்டிர்லிங் ஆகியோரை வீழ்த்திய இந்திய வீரர் குல்தீப், 21-வது ஓவரின் முதல் பந்தில் ஏ.ஜே..எல்.பாமை கிளீன் போல்டாக்கியதன் மூலம் ஹாட்ரிக் சாதனை படைத்தார். குல்தீப் யாதவ், மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஏ.ஏ.கனி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா வெற்றி

இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்வாத்கர் ரன் ஏதுமின்றியும், கேப்டன் விஜய் ஸோல் 4 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெய்ன்ஸ் 6 ரன்களிலும், சஞ்ஜூ சாம்சன் 7 ரன்களிலும், ஆர்.கே.புய் ரன் ஏதுமின்றியும் வெளியேற 5 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.

6-வது விக்கெட்டுக்கு இணைந்த சர்ஃப்ராஸ் கானும், தீபக் ஹூடாவும் மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, சிறப்பாக ஆடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆட 22.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. சர்ஃப்ராஸ் கான் 51 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், தீபக் ஹூடா 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

குல்தீப் யாதவ் ஆட்டநாயக னாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x