

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் முன்னேறியுள்ளன.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் கனடாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி ஒடாவா நகரில் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகளில் இங்கிலாந்தும், கனடாவும் தலா இரண்டில் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் கடைசி மாற்று ஒற்றையர் போட்டியில் இங்கிலாந்தின் கைல் எட்மண்டும், கனடாவின் ஷபொவாலோவும் மோதினர்.
இப்போட்டியில் கைல் எட்மண்ட் 6-3, 6-4, 2-1 என்ற செட்கணக்கில் முன்னணியில் இருந்தார். அப்போது கனடாவின் ஷபொவாலோவ் அடித்த பந்து, நடுவரின் கண்ணில் பட அவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இங்கிலாந்து வீரர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி யின் மூலம் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கனடாவை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ஸ்பெயினுக்கும் குரோஷி யாவுக்கும் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியில் ஸ்பெயின் அணி குரோஷியாவை 3-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ராபர்டோ படிஸ்டா அகுட் 6-1, 6-7, 6-3, 7-6 என்ற செட்கணக்கில் குரோஷியா வின் பிராங்கோ சுகோரை வீழ்த்தினார்.
ஜெர்மனிக்கு எதிரான மற்றொரு டேவிஸ் கோப்பை தொடரில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கணக்கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பெல்ஜியம் அணியின் ஸ்டீ டார்கிஸ், ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்செரிபரை 6-4, 3-6, 2-6, 7-6, 7-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். 4 போட்டிகளில் தோற்ற ஜெர்மனி அணிக்கு அலெக்சாண்டர் செரேவ், ஆறுதல் வெற்றியை தேடித் தந்தார். மாற்று ஒற்றையர் போட்டியில் அவர் பெல்ஜியத்தின் அர்தர் டீ கிரீபை ( 6-3, 6-3, 6-4 என்று நேர் செட்களில் வீழ்த்தினார்.