Published : 21 Feb 2014 12:10 PM
Last Updated : 21 Feb 2014 12:10 PM

ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது: ஷிண்டே

மக்களவைத் தேர்தல் காரணமாக, ஐபிஎல் போட்டிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

இதனால், ஐபில் சீசன் 7 போட்டிகள், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதற்கான சாத்தியமே மிகுதியாக உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ஐபிஎல் போட்டிகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது கடினம்" என்றார்.

ஐபிஎல் சீசன் 7 போட்டிகள் ஏப்ரலில் நடைபெறுகிறது. அதே நேரத்தில், ஏப்ரல் - மே மாதங்களில் பல்வேறு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கமான பிசிசிஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துவிட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய பாதுகாப்புப் பணிகளில் 1.20 லட்சம் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நக்சல் பாதிப்புள்ள மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்புப் போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரத்தில் பிசிசிஐ-க்கு மத்திய அரசு கைவிரித்துவிட்டதால், ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x