

இந்தியா ஆஸ்திரேலியா இடையே கான்பெராவில் நடைபெற்றுவரும் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 348 ரன்களை குவித்துள்ளது.
ஆஸி. அணியின் துவக்க வீரர்களான வார்னர், ஃபின்ச் இருவரும் ஆரம்பம் முதலே நிலைத்து ஆடி, அணி பெரிய ஸ்கோரை எட்ட அடித்தளம் அமைத்துத் தந்தனர். ஓவருக்கு 6 ரன்களுக்கு குறையாமல் அடித்து வந்த இந்த இணை பார்ட்னர்ஷிப்பில் 180 ரன்களைக் கடந்தது.
வார்னர் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டாலும், ஃபின்ச் 97 பந்துகளில் சதமடித்தார். 107 ரன்களில் அவர் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். மறுமுனையில் மார்ஷ் 33 ரன்களுக்கு வெளியேற அடுத்த மேக்ஸ்வெல் களமிறங்கினார்.வெறும் 27 பந்துகளில் ஸ்மித் அரை சதம் எட்டினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம்.
மேக்ஸ்வெல் தனது வழக்கமான டி20 பாணியில் விளாசித் தள்ள, ஆஸி. அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒரு பக்கம் அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், மேக்ஸ்வெல் தனது அதிரடியை தொடர்ந்தார்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸி. 8 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களைக் குவித்தது. மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடக்கம். 50-வது ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.
இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தபோதிலும், 10 ஓவர்களில் அவர் 77 ரன்களை வாரி வழங்கினார்.
ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் இந்தியா கவுரவ வெற்றியாவது பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் 349 ரன்களை இந்தியா விரட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.