சச்சின் சுயசரிதையும் முரண்பாடுகளும்

சச்சின் சுயசரிதையும் முரண்பாடுகளும்
Updated on
2 min read

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையில் அவர் மௌனம் சாதித்த விஷயங்களே உரக்கக் கேட்கிறது என்கிறார் எழுத்தாளர் மகரந்த் வைகங்கர்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்:

இந்திய கிரிக்கெட் சில ஆண்டுகளாக நிறைய ‘சிறு பிராட்மென்களை’ பார்த்துவிட்டது. ஆனால் உயர்மட்ட கிரிக்கெட் ஆட்டத்தின் தேவைகளினால் ஏற்பட்ட நெருக்கடியில் அவர்கள் சோபிக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் மும்பை மைதானங்களிலிருந்து எழுச்சி பெற்ற சுருண்ட முடி கொண்ட ஒரு வீரர் இதற்கு விதிவிலக்கு.

13-வயது சிறுவனாக ஸ்போர்ட்ஸ் ஸ்டார் டிராபியில் விளையாடிய காலத்திலிருந்து சச்சின் டெண்டுல்கரை லட்சக்கணக்கானோர் அறியத் தொடங்கினர்.

சச்சின் டெண்டுல்கர், என்ற இந்த ‘அதிசய சிறுவன்’ பேட்டிங்கின் அம்சங்களை கையகப்படுத்திய இவர், சுயசரிதையில் தனது நினைவுக்குறிப்புகள் மூலம் வாழ்க்கையை தனக்கேயுரிய நடையில் வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனால் அவரது பேட்டிங் எனும் கவிதையே உலகின் கண்களை ஈர்த்தது.

இல்லையெனில், மும்பையில் ஏதோ ஒரு மூலையில் விளையாடும் இளம் வீரர் ஒருவர் தனது மூளை மற்றும் இதயம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் கவர்ச்சியான கிரிக்கெட் பொது வாழ்க்கையில் மூழ்கியிருக்க முடியாது.

எனவே அவரது சுயசரிதை நூல் எதிர்பார்ப்புகளை கிளப்பியதில் ஆச்சரியமில்லை, நியாயமானதும் கூட, இவரது மிகப்பெரிய கிரிக்கெட் வாழ்க்கை புள்ளிவிவரங்களினால் பெரிதாகத் தெரிகிறது என்பதோடு, நவீன கிரிக்கெட்டில் இவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதாலும் எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. 100 சதங்கள், 200 டெஸ்ட் போட்டிகள், 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை என்று இவரது பெரிய பங்களிப்பு எதிர்பார்ப்புகளை நியாயமாகவே கிளப்பியுள்ளது.

கிரெக் சாப்பல் ஓரிரு தவறுகள் செய்திருக்கலாம். எந்த கேப்டனும், பயிற்சியாளரும் முழுதும் தவறற்றவர்களாக இருக்க முடியாது.

2007 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ‘சில மாதங்களுக்கு முன் சாப்பல் சச்சினிடம் கேப்டன்சியை அளிக்க விரும்பினார்’ என்றால் கேப்டனைத் தேர்வு செய்யும் அணித் தேர்வுக்குழுவிடம், அதாவது தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்காரிடம் இதனை சச்சின் தெரிவித்திருக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறதல்லவா? உடனடியாக கேப்டன் ராகுல் திராவிடிடம் இதனை சச்சின் விவாதித்திருக்க வேண்டியது அவசியம் அல்லவா? மாறாக சச்சினின் சுயசரிதை, இழந்த பதவி போல், இந்த விவகாரத்தை இப்போது தெரிவித்துள்ளது.

கிரெக் சாப்பல் சச்சின் டெண்டுல்கரின் வீட்டுக்கு 2006-ஆம் ஆண்டு முதல் பாதியில் சென்றதாகவே தெரிகிறது. அதாவது 2007 உலகக்கோப்பை போட்டிகளுக்கு 10 மாதங்கள் முன்பாக. 10 மாதங்களுக்கு முன்பாக என்பது எப்படி ‘சில மாதங்களுக்கு முன்பு’ என்று கூறப்படுகிறது? உடற்பயிற்சியாளர் ஜான் குளோஸ்டர், சாப்பலுடன் சென்றுள்ளார். மதிய உணவின் போது உரையாடல் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டுல்கர் வெளியீட்டில் அந்த உரையாடலின் கூற்றிடச் சூழல் சரியாக பதிவாகவில்லை.

எனவே, சாப்பலை விமர்சிப்பதில் கபடமான நோக்கம் இருப்பதான தோற்றத்தை சச்சின் சுயசரிதையின் இந்தப் பக்கங்கள் ஏற்படுத்துகிறது. இதனை அதிருப்தி வீரர்கள் ஆதரித்துள்ளனர்.

சாப்பல் விவகாரம் மட்டுமே இந்த நூலின் ஒரே முரண்பாடு அல்ல. பார்படாஸ் போட்டி தோல்வி பற்றி சச்சின் குறிப்பிடும்போது, கும்ளேயும் ஸ்ரீநாத்தும் தன் அறைக்கு வந்து ஆறுதல் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னரே, தோள்பட்டை காயம் காரணமாக ஸ்ரீநாத் பயணத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். சச்சின் குறிப்பிட்ட அந்த போட்டியின் போது அவர் தென் ஆப்பிரிக்காவில் மருத்துவரை ஆலோசித்துக் கொண்டிருந்தார். அவர் எப்படி சச்சினுக்கு ஆறுதல் கூறியிருக்க முடியும்?

தரவுகளை சரியாகக் கொடுக்க 3 ஆண்டுகால ஆய்வு டெண்டுல்கருக்கு, அதாவது அவரது கோஸ்ட் எழுத்தாளருக்கு போதவில்லை போலும். துரதிர்ஷ்டவசமாக அவரது சுயசரிதை விவகாரங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறதே தவிர, அகப்பார்வையுடன் விவரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நடந்தவற்றை விவரிப்பதாக மட்டுமே நூல் இருக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம், ஆனாலும் சச்சின் போன்ற மரியாதைக்குரிய ஒருவர் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலமான சூதாட்டம் பற்றி குறிப்பிடாமல் இருப்பது அவரது குணாம்சத்திற்கு பொருத்தமாகப் படவில்லை.

கிரிக்கெட் சூதாட்ட காலகட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்தார் சச்சின். சூதாட்டம் பற்றிய மவுனமே அவரது நூலில் உரக்கக் கேட்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in