Last Updated : 12 Sep, 2016 04:33 PM

 

Published : 12 Sep 2016 04:33 PM
Last Updated : 12 Sep 2016 04:33 PM

தேர்வுக்குழு தலைவராக இருப்பது நட்புகளின் இழப்பில்தான் முடியும்: சந்தீப் பாட்டீல் வருத்தம்

தனது பதவிக்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியை கடைசியாக ஒருமுறை தேர்வு செய்த சந்தீப் பாட்டீல், “தேர்வுக்குழுவில் இருப்பதால் ஏற்படும் ஒரே வருத்தம் என்னவெனில் நமது நெருக்கமான நட்புகளை இழந்து விடுவோம் என்பதே” என்று கூறியுள்ளார்.

2012 செப்டம்பர் மாதம் மொஹீந்தர் அமர்நாத் இடத்தில் சந்தீப் பாட்டீல் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வருவதையடுத்து ‘மகிழ்ச்சியுடன் செல்கிறேன்’ என்கிறார் சந்தீப்.

“இந்திய அணியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில தைரியமான, கடினமான முடிவுகளை எடுத்தோம். எங்கள் பதவிக்காலம் முடிவுறும் தருணத்தில் மகிழ்ச்சியாகவே செல்கிறோம், காரணம் அணி நன்றாக விளையாடி வருகிறது, அதாவது 3 வடிவங்களிலும் நன்றாக ஆடி வருகிறது. அடுத்து வரும் தேர்வுக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.

எனக்கு இந்த பெரிய பொறுப்பை அளித்த பிசிசிஐ-க்கு எனது ஆழ்ந்த நன்றிகள். எனது காலத்தில் வாரியம் சில அருமையான முடிவுகளை எடுத்தது. ஜூனியர் அணிகளின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டது இதில் ஒன்று. அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் இன்னொரு பெரிய முடிவு.

எங்களது 4 ஆண்டுகால தேர்வுக்குழு நடவடிக்கைகளில் பிசிசிஐ-யின் எந்த மண்டல அதிகாரியின் தலையீடும் இருக்கவில்லை. யாரும் பரிந்துரைகளுடன் எங்களை அணுகவில்லை.

அனைத்து வடிவங்களுக்கும் தேர்வு செய்ய பெரிய அளவிலான வீரர்களுடன் நாங்கள் விட்டுச் செல்கிறோம்.

உள்நாட்டில் எப்போதும் நன்றாகவே ஆடுகிறோம், எனவே நியூஸிலாந்து அணிக்கு எதிராக அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இந்தியாவுக்கு வெளியேயும் மேலும் சிறப்பாகச் செயல்படுவோம்” என்றார்.

2013-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக அவசரமாக கொண்டு வரப்பட்ட தொடருக்கு முன் சச்சின் டெண்டுல்கரிடம் இதுதான் அவரது கடைசி தொடர் என்று கூறப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாட்டீல், “சில விஷயங்கள் தேர்வுக்குழுவுக்கும் பிசிசிஐ-க்கும் ஆனது, இதில் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்” என்றார்.

புதிய தேர்வுக்குழு நேர்காணல் முறையில் தேர்வு:

செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்த பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே, இனி தேர்வுக்குழு உறுப்பினர்கள் நேர்காணல் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

“தேர்வுக்குழு உறுப்பினராக வருவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் முடிவாகும் இது. நாங்களாகவே இனி தேர்வுக்குழுவை தேர்ந்தெடுக்கப்போவதில்லை. இதனால்தான் விண்ணப்பங்களுக்கு ஏற்கெனவே கோரியுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x