

3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் இரட்டையர் சிறப்பு ஜோடியான சானியா மிர்சா, மாரிடினா ஹிங்கிஸ் ஜோடி பிரிவதென முடிவெடுத்துள்ளனர்.
இது குறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “ஆம். முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக ஆட்டத்தின் முடிவு உற்சாகமூட்டுவதாக இல்லை. எப்படியிருந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் முடிவுக்கு வர வேண்டியதுதான், இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்து அவரும் சின்சினாட்டி ஓபன், யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு சானியாவின் ஜோடியாக செக்.குடியரசு வீராங்கனை பார்பரா ஸ்ட்ரைகோவா விளையாடுவார்” என்றார்.
இதே ஸ்ட்ரைகோவா, லூசி சஃபரோவாவுடன் இணைந்துதான் ரியோ ஒலிம்பிக்கில் வில்லியம் சகோதரிகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா-ஹிங்கிஸ் ஜோடி 14 டபிள்யூ.டி.ஏ. பட்டங்களையும் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளனர். உலகின் நம்பர் 1 இரட்டையர் ஜோடியாக பரிணமித்துள்ளனர், தொடர்ச்சியாக போட்டிகளை வென்றும் சாதனை படைத்துள்ளனர்.
சமீப காலங்களில் சானியா மிர்சா-ஹிங்கிஸ் ஜோடி தரவரிசை 100--ம் இடத்துக்கு மேல் உள்ள வீராங்கனைகளிடம் தோல்வி தழுவியதால் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.