

444 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் என்ற உலகசாதனையை இங்கிலாந்து அணி படைத்தது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் 3-வது போட்டியை இங்கிலாந்து 169 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் ரன் சேர்ப்புக்கு சாதகமாக இருந்ததால், துவக்கத்திலிருந்தே இங்கிலாந்து வேகமாக ரன் சேர்க்கத் தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர் ராய் 15 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஹேல்ஸ் அதிரடியாக ஆடி வந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் இணைந்த ஹேல்ஸ், முதலில் சற்று நிதானித்தாலும் பிறகு அதிரடிக்கு மாறினார். 55 பந்துகளில் அரை சதம் கடந்த ஹேல்ஸ், அடுத்த 28 பந்துகளில் சதத்தை எட்டினார். மறுமுனையில் ஜோ ரூட் 58 பந்துகளில் அரை சதம் தொட்டார். இருவரும் இணைந்து 248 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.
ஹேல்ஸ் சாதனை
அலெக்ஸ் ஹேல்ஸ் 165 பந்துகளில் 171 ரன்களை எட்டியிருந்த போது, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதில் 22 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால் இந்த சாதனையை எட்டிய அடுத்த பந்திலேயே ஹேல்ஸ் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் ரூட் 85 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து களத்தில் இருந்த பட்லர் - மார்கன் ஜோடி முந்தைய ஜோடி விட்ட அதிரடியை தொடர்ந்தனர். பந்து பவுண்டரியைக் கடந்து பறந்துகொண்டே இருக்க, இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே போனது. குறிப்பாக, பட்லர் 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஒருவர் எடுத்த அதிவேக அரைசதம் இது.
50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து அணி 444 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது.
பாகிஸ்தானின் வேகமும், வேகத்தடையும்
445 ரன்கள் என்ற அசாத்தியமான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி ஒரு பக்கம் வேகமாக ரன் சேர்த்து வந்தாலும், மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. சமி அஸ்லம் (8 ரன்கள்), அசார் அலி (13 ரன்கள்) என ஆட்டமிழக்க, மறுமுனையில் ஷர்ஜீல் கான் 26 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடக்கம். ஆனால் அவரும் 58 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய பாகிஸ்தானின் தோல்வி உறுதியானது. அதேநேரம், யாரும் எதிர்பாராத வகையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஆமிர், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் அரை சதத்தை எட்டி ஆச்சரியப்படுத்தினார்.
முடிவில் 42.4 ஓவர்களில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான், 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இங்கிலாந்து அணியின் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகனாக ஹேல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.