Published : 02 Nov 2013 09:30 AM
Last Updated : 02 Nov 2013 09:30 AM

தொடரை வெல்வது யார்?: இந்தியா - ஆஸி இன்று பலப்பரிட்சை

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 7-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.



கடந்த 6 போட்டிகளில் இரு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளும் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனால் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களம் காண்கின்றன.

இரு அணிகளுமே வெற்றிக்கு போராடும் என்பதால் கடந்த போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நாக்பூரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 351 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி, இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்குகிறது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் இந்திய அணிக்கு தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தொடரில் இந்திய அணி 350 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடித்த இரு போட்டிகளிலுமே இந்த ஜோடியின் பங்கு அளப்பரியது. கடந்த போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. ஷிகர் தவண் சதம் அடித்தார். ரோஹித் சர்மா 79 ரன்கள் குவித்தார்.

பட்டையை கிளப்பும் கோலி... மிடில் ஆர்டரில் விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகிறார். இதுவரை 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 2 சதம், 2 அரைசதம் உள்பட மொத்தம் 344 ரன்கள் குவித்துள்ளார். அவரை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய பௌலர்கள் தடுமாறி வருகின்றனர். அவரை வீழ்த்துவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் தோனியும் நல்ல பார்மில் இருக்கிறார். சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவின் வேகமான பௌலிங் மற்றும் பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருவது கவலையளிப்பதாக உள்ளது. இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு அம்பட்டி ராயுடுவை அணியில் சேர்க்க வாய்ப்பிருந்தாலும், வெற்றிக் கூட்டணியை கலைக்க கேப்டன் தோனி விரும்பமாட்டார். அதனால் ராயுவுடுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக நாடு திரும்பியதால், இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சாதகமாகும்.

திக்குமுக்காடும் பெளலர்கள்...

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், பந்துவீச்சில் முன்னேற்றம் எதுவும் இல்லை. புவனேஸ்வர் குமார் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்துவீசி வருகிறார். முகமது சமி, அஸ்வின், அமித் மிஸ்ரா என அனைத்து இந்திய பௌலர்களையும் ஆஸ்திரேலியாவின் பெய்லி, வாட்சன் ஆகியோர் பந்தாடினர்.

ஆஸ்திரேலிய தொடரில் தோனி அனைத்து பௌலர்களையும் பயன்படுத்தியபோதும், அவரின் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. பந்துவீச்சில் தோனி மாற்றம் செய்யும் பட்சத்தில் மிஸ்ரா நீக்கப்பட்டு வினய் குமார் அல்லது உனட்கட்டுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

மிரட்டும் பெய்லி... ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணிக்கு நிகரான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஆரோன் பிஞ்ச், பில் ஹியூஸ், ஷேன் வாட்சன், கேப்டன் பெய்லி, கிளன் மேக்ஸ்வெல், ஆடம் வோஜஸ், ஃபாக்னர் என வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். கேப்டன் பெய்லி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் இதுவரை 474 ரன்கள் குவித்துள்ள பெய்லி, இந்த ஆட்டத்திலும் இந்திய பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

ஜான்சன் இல்லை...

ஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணியைப் போலவே பந்துவீச்சுதான் தலைவலியாக உள்ளது. இந்தப் போட்டியில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் பங்கேற்காதது அவர்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணி வலுவான ஸ்கோரை குவித்தாலும், அவர்களின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களிடம் எடுபடவில்லை. அதனால் அவர்களின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதனால் பந்துவீச்சில் வாட்சன், ஃபாக்னர் போன்றோரையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. மொத்தத்தில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் அணியே தொடரைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

மைதானம் எப்படி?

பெங்களூர் சின்னசாமி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் இரு அணிகளும் வலுவான ஸ்கோரை குவிக்கும் எனத் தெரிகிறது. தீபாவளித் திருநாளில் நடைபெறும் இந்தப் போட்டியில் பட்டாசாய் வெடித்து பட்டையைக் கிளப்ப இரு அணிகளும் காத்திருக்கின்றன. பெங்களூரில் இந்திய அணி இதுவரை 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. மற்றொரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இங்கு 5 முறை மோதியுள்ளன. 3 போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், வினய் குமார், அமித் மிஸ்ரா, ஜெயதேவ் உனட்கட், முகமது சமி.

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்) நாதன் கோல்டர் நீர், சேவியர் டோஹெர்ட்டி, ஜேம்ஸ் ஃபாக்னர், கேலம் பெர்குசன், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹேடின், மோசஸ் ஹென்ரிக்ஸ், பில் ஹியூஸ், கிளன் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்காய், ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.

போட்டி நேரம் : மதியம் 1.30 நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்ஷன்.

டாஸ் வென்றால் பீல்டிங்: கோலி

டாஸ் வெல்லும் பட்சத்தில் முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயிப்பதைவிட, இரண்டாவதாக பேட் செய்து இலக்கை துரத்திப் பிடிப்பதற்கே இந்திய அணி முன்னுரிமை கொடுக்கும் என்று இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இரண்டாவதாக பேட் செய்து இலக்கை துரத்திப் பிடிப்பதே நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இரண்டாவதாக பேட் செய்யும்போது நாம் எட்ட வேண்டிய இலக்கு நமக்குத் தெரியும். நாம் சிறப்பாக விளையாடுவதற்கு திட்ட மிடலாம். இக்கட்டான சூழலில் எப்படி விளையாடுவது என சிந்திக்கலாம். எந்த பௌலரின் பந்துவீச்சை அடித்து விளையாடலாம். எப்படிப்பட்ட பந்துகளில் அதிரடியாக ரன் சேர்க்கலாம் என்பதை கணக்கிட வசதியாக இருக்கும்.

முதலில் பேட் செய்யும் பட்சத்தில் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதா அல்லது பௌலிங்கிற்கு சாதக மானதா என்பது குறித்து முன்னரே மதிப்பிடுவது அவசியம். பெரிய ஸ்கோரை குவிப்பதற்கு பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது முக்கியமானது. முதலில் பேட் செய்தாலும், இரண்டாவதாக பேட் செய்தாலும் பார்ட்னர்ஷிப் என்பது ஓர் அணிக்கு மிக முக்கியமானது" என்றார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கோலி தனது பார்ம் குறித்துப் பேசுகையில், "இதுவரை நான் விளையாடியவிதம் எனக்கு மனநிறைவு அளிக்கிறது. முந்தைய போட்டிகளில் விளை யாடியதைப் போலவே கடைசி போட்டியிலும் விளையாடுவேன் என நம்புகிறேன். இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாக இருந்துள்ளது. அதனால் இந்தத் தொடரை வெல்வதற்கு நாங்கள் வகுத்திருக்கும் வியூகத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் அனைவரும் கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியோடு உள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x