

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா பிரிவில் இந்திய அணி, நியூஸிலாந்தை எதிர்த்து இன்று விளையாட உள்ளது. இந்த ஆட்டம் புனேவில் உள்ள பாலேவாடி விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியில் லியாண்டர் பயஸ், ராம்குமார் ராமநாதன், விஷ்ணுவர்தன், யூகி பாம்ப்ரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். சாகேத் மைனேனி கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதில் இந்திய அணியில் விஷ்ணுவர்தன் சேர்க்கப்பட்டுள்ளார்.
18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பயஸூக்கு இது 55-வது டேவிஸ் கோப்பை ஆட்டமாகும். இரட்டையர் பிரிவில் விஷ்ணுவர்தனுடன் இணைந்து பயஸ் விளையாட உள்ளார். டேவிஸ் கோப்பை வரலாற்றில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலியின் நிக்கோலா பீட்ரன்கேலி 42 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதே சாதனையாக உள்ளது.
இந்த சாதனையை முறியடிக்க லியாண்டர் பயஸூக்கு ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது. இரட்டையர் பிரிவு ஆட்டம் நாளைதான் நடைபெறுகிறது. இதில் பயஸ் வெற்றி பெறும் பட்சத்தில் புதிய சாதனையை நிகழ்த்தக்கூடும்.
பயஸ், விஷ்ணுவர்தன் ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தின் ஆர்டெம் ஷிடாக், மைக்கேல் வீனஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. டேவிஸ் கோப்பை போட்டியானது புனேவில் 43 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே மைனேனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், ரோகன் போபண்ணாவுடன் இணைந்து களமிறங்க லியாண்டர் பயஸ் விரும்பியதாக தெரிகிறது. ஆனால் ரோகன் போபண்ணா இதற்கு சம்மதிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 368-வது இடத்தில் உள்ள இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் பின் டீயர்னேவுடன் மோதுகிறார். பின்டீயர்னே தரவரிசையில் 414-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாம்ப்ரிக்கு இந்த ஆட்டம் எளிதாக இருக்கக் கூடும்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 206-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், 417-ம் நிலை வீரரான ஜோஸ்சத்தமை எதிர்த்து விளையாடுகிறார்.
டேவிஸ் கோப்பையில் இந்திய அணி இதுவரை நியூஸிலாந்துக்கு எதிராக 8 முறை மோதி உள்ளது. இதில் இந்தியா 5 முறை வெற்றியும் 3 முறை தோல்வியும் கண்டுள்ளது. 1978-க்கு பிறகு இந்திய அணி, நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து இல்லை.