Published : 10 Jun 2017 08:55 PM
Last Updated : 10 Jun 2017 08:55 PM

அஸ்வின் ஆட வாய்ப்பு: வாழ்வா, சாவா ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் ஞாயிறன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளுமே வாழ்வா, சாவா என்ற போராட்ட நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கின்றன.

பி பிரிவில் உள்ள இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இந்த 4 அணிகளுக்குமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இவற்றில் ஏதாவது இரு அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும்.

இந்தியா-இலங்கை மோதிய அதே பிட்சில் விளையாடப்படலாம் என்பதால் இரு அணிகளுமே இலக்கை விரட்டுவதையே விரும்பும்.

இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடனும், இலங்கை அணி தனது கடைசி ஆட்டத்தில் 12-ம் தேதி பாகிஸ்தானுடம் மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறும்.

கேப்டனாக விராட் கோலி முதன்முறையாக ஒருநாள் போட்டியில் கடினமாக சூழ்நிலையை சந்திக்க உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 321 ரன்களை குவித்த போதும் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணியின் தன்னம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது.

அதேவேளையில் தென் ஆப்ரிக்க அணி பெரிய அளவிலான தொடர்களில் முக்கியமான கட்டத்தில் கோட்டை விடும் பழக்கத்தை கொண்டுள்ளது. இந்த துரதிருஷ்டத்தால் அந்த அணி 'சோக்கர்ஸ்' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியடையும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறும்.

இதே நிலைமைதான் தென் ஆப்ரிக்க அணிக்கும். ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறும். மாறாக தோவியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியது தான்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் கேப்டன் மிகுந்த நெருக்கடியை சந்திக்க நேரிடக்கூடும். ஏனேனில் பயிற்சியாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில்தான் கோலி இந்த தொடரை சந்தித்தார்.

மறுபுறம் தென் ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளை புறக்கணித்தே ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. தென் ஆப்ரிக்க அணியில் தரம் வாய்ந்த இடது கை மட்டையாளர்களான குயிண்டன் டி காக், டுமினி, டேவிட் மில்லர் உள்ளனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அஸ்வினின் சுழல் ஜாலத்தை கோலி பயன்படுத்தக்கூடும்.

அஸ்வின் இயல்பாகவே பந்து வீச்சில் சில தந்திரங்களை கையாளக்கூடியவர். இரு ஆட்டங்களிலும் அவர் சேர்க்கப்படாததால் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார். இது இந்திய அணிக்கு சாகதமாக அமைய வாய்ப்புள்ளது.

இன்றைய ஆட்டத்துக்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வதில் கோலிக்கு சற்று தலைவலி ஏற்படக்கூடும். வெற்றி கூட்டணியை கோலி தேர்வு செய்தால், அவரது அறிவாற்றல் மற்றும் புரிதல் மேம்பட்டுள்ளதாகவே கருதவேண்டும்.

அஸ்வின் களமிறங்கும் பட்சத்தில் ஜடேஜா, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோரில் யாரேனும் ஒருவர் நீக்கப்படக்கூடும். மெதுவாக வீசப்படும் பந்துகளில் தென் ஆப்ரிக்க வீரர்கள் திணறுவார்கள் என்பதால் இந்திய அணி எப்படியும் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் போட்டியை அணுகக்கூடும்.

இதனால் ஜடேஜா நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை. மேலும் பீல்டிங்கிலும் ஜடேஜா பலம் சேர்த்து வருகிறார். வலிமையான தோள்களை கொண்டுள்ள அவர் உள்வட்டத்துக்குள்ளும், எல்லைக் கோட்டின் எந்த பகுதியில் இருந்தும் பீல்டிங்கின் போது பந்துகளை விரைவாக எடுத்து த்ரோ செய்வதில் வல்லவர்.

எப்படியும் ஒரு ஆட்டத்தில் தனது அபாரமான பீல்டிங் திறனால் 15 ரன்கள் வரை சேமிக்கும் திறன் கொண்ட அவர், குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு பயனளிக்கக்கூடிய வீரராகவே இருப்பார்.

ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காகவே ஆல்ரவுண்டராக 7-வது இடத்தில் களமிறக்கப்படுகிறார். சூழ்நிலைக்கு தகுந்தபடி அவரது பேட்டிங் வரிசை மாற்றியும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரும் அணியில் நீடிப்பார் என்றே தெரிகிறது.

வேகப் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதே உண்மை. எனவே அஸ்வினுக்கு இவர் வழி கொடுக்கலாம், அல்லது ஹர்திக் பாண்டியா வழி கொடுக்கலாம், ஆனால் புவனேஷ் குமார் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வைத்துள்ள சிக்கன விகிதம் 7.17 என்பது சிக்கனமற்ற விகிதமாக உள்ளது. உமேஷ் யாதவ்வும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6.81 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இந்த விதத்தில் மொகமது ஷமி மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிக்கன விகிதத்தை ஓவருக்கு 6 ரன்களுக்குக் குறைவாக வைத்துள்ளார்.

எனவே பவுலிங் வரிசை மொகமது ஷமி, உமேஷ் யாதவ் அல்லது புவனேஷ் குமார், அஸ்வின் ஜடேஜா, பாண்டியா என்பதாக இருக்கலாம்.

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது பவர்பிளேவில் இந்திய அணி ரன்களை தாரை வார்த்தது. தென் ஆப்ரிக்க அணியில் நடுகள வரிசையில் டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளதால் இந்திய அணி எச்சரிக்கையுடன் ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்திய அணி இரு ஆட்டங்களிலும் முறையே 319, 321 ரன்களை குவித்தது. ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி இரு ஆட்டங்களிலும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது.

ஆனால் இந்த ஜோடி அதிக பந்துகளை எதிர்கொள்வது சற்று பலவீனமாக உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த தாக்கத்தை உணர முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் மொத்தம் 207 பந்துகளை எதிர்கொண்டு 203 ரன்களை சேர்த்தனர்.

புதிய பவர்பிளே விதிகளின்படி 340 ரன்களுக்கு குறைவாக எடுத்தால், நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்கும் உத்திகள் சிறந்த பலன் அளிக்காது. இந்த தொடரில் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி 2-வது பவர்பிளேவில் மந்தமாகவே ரன்கள் சேர்த்தது.

கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் விளாசும் திறன் கொண்ட இந்திய வீரர்கள் 11 முதல் 40-வது ஓவர் வரையிலான காலக்கட்டத்தில் (2-வது பவர்பிளே) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

இந்திய அணி 170 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் இலங்கை அணி 203 ரன்கள் விளாசி மிரட்டியது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த போது கோலி இதை வெகுவாக சுட்டிக் காட்டினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்த விஷயத்தில் இந்திய அணி சிறப்பு கவனம் செலுத்தக்கூடும்.

கடந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆன கோலிக்கு, இந்த ஆட்டத்தில் சவால் கொடுக்க ரபாடா, மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ் தயாராக உள்ளனர். இதேபோல் கூக்ளி பந்துகளை சிறப்பாக கைளாளும் இம்ரன் தகிர், ரோஹித் சர்மாவுக்கு நெருக்கடி தரக்கூடும்.

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா, கூக்ளி பந்துகளை சமாளிக்க முடியாமல் தனது விக்கெட்களை பலமுறை பறிகொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான இரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x