மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பாண்டியாவின் கேட்சை தவறவிட்டதால் தோற்றோம்: கொல்கத்தா கேப்டன் காம்பீர் கருத்து

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பாண்டியாவின் கேட்சை தவறவிட்டதால் தோற்றோம்: கொல்கத்தா கேப்டன் காம்பீர் கருத்து
Updated on
2 min read

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பாண்டியாவின் கேட்சை தவறவிட்டதால் தோற்றோம் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இப்போட்டியில் டாஸில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இதைத்தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் காம்பீரும், கிறிஸ் லின்னும் களம் இறங்கினர். குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் இழக்காமலேயே கொல்கத் தாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்த ஜோடி, இப்போட்டியில் 44 ரன்களில் பிரிந்தது. 19 ரன்களை எடுத்த நிலையில் குருனால் பாண்டியாவின் பந்தில் மெக்லீனகனிடம் கேட்ச் கொடுத்து கவுதம் காம்பீர் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து உத்தப்பா (4 ரன்கள்), கிறிஸ் லின் (32 ரன்கள்), யூசுப் பதான் (6 ரன்கள்) ஆகியோரும் ஆட்டம் இழக்க கொல்கத்தா அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. இந்நிலையில் மணிஷ் பாண்டே தனி நபராக மும்பைக்கு எதிராக போராடினார். 47 பந்துகளில் அவர் 81 ரன்களைக் குவிக்க, கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை சேர்த்தது.

வெற்றி பெற 179 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த மும்பை அணி, மிக கவனமாக இலக்கைத் துரத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பார்த்திவ் படேல் 30 ரன்களையும், பட்லர் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ரோஹித் சர்மா (2 ரன்கள்) குருனால் பாண்டியா (11 ரன்கள்), பொல்லார்ட் (17 ரன்கள்) என்று அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, மும்பை அணி தடுமாறியது. ஆனால் ராணா 29 பந்துகளில் 50 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் 29 ரன்களையும் குவித்து மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 19.5 ஓவர் களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் களைக் குவித்து மும்பை இந்தி யன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

இந்தப் போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ராணாவும், ஹர்திக் பாண்டியாவும் மிகச் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றுத் தந்தனர். அவர்களைப் போன்ற இளம் வீரர்கள் அணியின் வெற்றிக்கு பங்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த போட்டியில் வென்றபோதிலும் நாங்கள் பல விஷயங்களில் முன்னேறவேண்டி உள்ளது. பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறும்போது, “எங்கள் வீரர்களுக்கு நெருக்கடி யான கட்டங்களை எப்படி கையாள் வது என்று தெரியவில்லை. நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தோம். அதிலும் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் நிறைய ரன்களைக் குவித்தோம், இருப்பினும் பீல்டிங்கில் சொதப்பிவிட்டோம். ஹர்திக் பாண்டியாவின் கேட்சைப் பிடித்திருந்தால் இப்போட்டியில் நாங்கள் வென்றிருப்போம். அவரது கேட்சை தவறவிட்டதே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து விட்டது. அதனாலேயே இப்போட்டி யில் தோற்றோம். மைதானத்தில் பனி இருந்தது எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை பாதித்தது” என்றார்.

கொல்கத்தா அணியின் வீரர் மணிஷ் பாண்டே கூறும்போது, “பந்துவீச்சில் கொல்கத்தா அணி மேலும் முன்னேற வேண்டும். குறிப் பாக கடைசி ஓவர்களில் நன்றாக பந்துவீச வேண்டும்” என்றார்.

கிறிஸ் லின் காயம்

மும்பைக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும்போது கொல்கத்தா அணி வீரரான கிறிஸ் லின்னின் தோளில் காயம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் அவரது தோளில் காயம் ஏற்படுவது இது 3-வது முறையாகும். இதன் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போட்டி முடிந்த பிறகு, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள லின், “கிரிக்கெட் கடவுள்களே, நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு கண்டனம்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நேற்று முன்தினம் ரோஹித் சர்மா 2 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதை ஏற்காத ரோஹித் சர்மா, அம்பயரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in