என்னை தொடக்க வீரராக களமிறக்க தோனி எடுத்த முடிவு: ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

என்னை தொடக்க வீரராக களமிறக்க தோனி எடுத்த முடிவு: ரோஹித் சர்மா நெகிழ்ச்சி
Updated on
1 min read

ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராகத் தன்னை களமிறக்க தோனி எடுத்த முடிவு தன் கிரிக்கெட் எதிர்காலத்தையே மாற்றி விட்டது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தொடக்க வீரராக என்னைக் களமிறக்க கேப்டன் தோனி எடுத்த முடிவு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதனையடுத்து நான் சிறப்பான பேட்ஸ்மெனாக முடிந்தது. அதாவது என் ஆட்டத்தை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல உதவியாக இருந்தது.

அவர் ஒருநாள் என்னிடம் வந்து ‘நீ தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ நன்றாக ஆடுவாய் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது, கட், புல் ஷாட்களை நன்றாக ஆடும் திறமை இருப்பதால் தொடக்க வீரராக நீ வெற்றி பெற முடியும்’ என்றார்.

மேலும் தோல்விகளையும், விமர்சனங்களையும் கண்டு அஞ்சக்கூடாது என்றும் தோனி என்னிடம் கூறினார். அப்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வரவிருந்ததால் பெரிய புலத்தில் நின்று அவர் இதனை யோசித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் நான் தொடக்கத்தில் களமிறங்கியதன் மூலம் அந்த பிட்ச் சூழல்களில் வெள்ளைப் பந்தை விளையாடும் சவால்களைச் சந்திக்க நம்பிக்கையூட்டியது.

மோர்னி மோர்கெல், ரயான் மெக்லாரன், சொட்சோபி, ரோரி கிளெய்ன்வெல்ட் இருந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நான் 65 ரன்கள் எடுத்தேன். தென் ஆப்பிரிக்காவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை என்னால் கையாள முடியும் என்று தோனி நம்பினார், நானும் அவரது நம்பிக்கையைப் பூர்த்தி செய்தேன்.

மற்ற கேப்டன்களை குறைத்து மதிப்பிடாமல் கூறுகிறேன், இத்தனையாண்டுகளாக தோனியின் கீழ் ஆடுவதற்கான ஆசீர்வாதம் பெற்றுள்ளேன் என்றே கூற வேண்டும். நெருக்கடி சூழலில் அவரது அமைதி எங்களுக்கு உதவியது. அவரும் அணியை முன்னின்று வழிநடத்தினார். அவரைப்போன்ற ஒருவரைப் பார்க்க முடியாது.

இவ்வாறு கூறிய ரோஹித் சர்மா, கருண் நாயர் முச்சதத்தினால் தனக்கு அணியில் இடம்பற்றிய பாதுகாப்பின்மை உணர்வு இல்லை என்றும் தனக்கு எப்பவுமே அம்மாதிரி எண்ணம் ஏற்பட்டதில்லை என்றும் கூறியதோடு, கருண் நாயரின் முச்சதம் அபாரமான இன்னிங்ஸ் அதனை உண்மையில் ரசித்து பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in