Published : 24 Nov 2014 08:49 PM
Last Updated : 24 Nov 2014 08:49 PM

வருண் ஆரோன் வேகத்தில் அசந்து போன ஆஸ்திரேலியர்கள்; அஸ்வினை ஸ்லிப்பில் நிறுத்துவது சரியா?

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அதிவேக பந்துகளை வீசிய வருண் ஆரோனைக் கண்டு ஆஸ்திரேலியர்கள் அசந்து போயுள்ளனர்.

இன்று அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வழக்கமாக போதுமான வேகத்துடன் ஸ்விங் பந்துகளை வீசும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து பழகிய ஆஸ்திரேலியர்கள் இன்று வருண் ஆரோன் வீசிய வேகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸி. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் நீண்ட நாளைய பயிற்சி தொடர்புடைய பயிற்சியாளர் டிரென்ட் உட்ஹில், வருண் ஆரோன் பற்றிய தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 2011ஆம் ஆண்டு டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் பயிற்சி முகாமில் வருண் ஆரோனை தான் முதன் முதலில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

”விமானத்தில் வந்த என் களைப்பா, தூக்கக் கலக்கமா என்று புரியவில்லை, வருண் ஆரோன் உண்மையில் அதிவேகமாக வீசினார். இந்தியாவில் பந்துகள் விக்கெட் கீப்பரிடம் செல்லும் முன் செத்து விடும், ஆனால் இவரது பந்துகள் மேலும், மேலும் எகிறியபடி சென்றன” என்றார்.

இன்றைய பயிற்சி ஆட்டத்தில் வருண் ஆரோன் பந்து வீச்சைப் பார்த்த பிறகு அவர் கூறும் போது, “பிரிஸ்பன் பிட்சில் வருண் ஆரோன் வீசுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அந்த வேகத்தில் அவர் பந்தின் தையல் பகுதி தரையில் படுமாறு வீசுவது அரிதானது. தையல் தரையில் படாமல் வேகமாக வீசுவது என்பதல்ல இவரது வேகப்பந்து வீச்சு முறை. டெஸ்ட் போட்டிகளில் வருண் ஆரோன் மணிக்கு 140 கிமீ மற்றும் அதற்கும் அதிகமான வேகத்தில் வீசாவிட்டால் நான் பெருத்த ஏமாற்றமடைவேன். மிட்செல் ஜான்சன் வேகத்திற்கு வருண் ஆரோன் ஈடுகொடுப்பார் என்றே கருதுகிறேன்.

விராட் கோலி தலைமையிலான இளம் இந்திய அணியிடத்தில் தங்கள் திறமைகள் மேல் நல்ல நம்பிக்கை உள்ளது. இப்போது, எதிரணியினரின் மரியாதையைப் பெறுவது மட்டும் இந்திய அணியின் நோக்கமாக இருக்காது, அவர்கள் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்த சித்தமாயிருப்பதாகவே நான் நினைக்கிறேன்” என்றார் அவர்.

இன்று அதிகபட்சமாக 58 ரன்களை எடுத்த ரியான் கார்ட்டர்ஸ், வருண் ஆரோன் பற்றி கூறும்போது, “வருண் ஆரோன் நிச்சயம் வேகமாக, ஆக்ரோஷமாக வீசுவார் என்பதை நான் அறிவேன், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பந்து வீச்சை எதிர்கொண்டேன், அவரது வேகத்தில் மாற்றமில்லை. அவர் சில அதிவேக பவுன்சர்களை இன்று வீசினார். இது எங்கள் நடுக்கள பேட்ஸ்மென்களுக்கு சில சேதங்களை விளைவித்தது. ஆனாலும், சில வேளைகளில் அவரை சரியாகவே விளையாடினோம் என்றே நினைக்கிறேன்” என்றார்.

அஸ்வினை ஸ்லிப் பீல்டராகக் கருத முடியுமா?

இந்தியா, இந்த ஆஸ்திரேலியத் தொடரில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அது ஸ்லிப் கேட்சிங் மூலமாகவே முடியும். இங்கிலாந்தில் ஏகப்பட்ட கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. ஜடேஜா விட்ட கேட்சினால் ராஜஸ்தான் பவுலர் பங்கஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வே கேள்விக்குறியானது நினைவிருக்கலாம். விராட் கோலி உட்பட ஸ்லிப்பில் கேட்ச்களை கோட்டை விட்டனர். அஸ்வின் ஒரு போதும் இதற்கு மாற்று கிடையாது. வேகப்பந்துகளுக்கான அவரது நகர்வு, ரிஃப்ளெக்ஸ் டெஸ்ட் தரத்திற்கு உயர்ந்ததாக இல்லை என்பது தெளிவு.

இன்று, முதல் ஸ்பெல்லில் கேப்டன் ஆஷ்டன் டர்னர் மற்றும் நிக் ஸ்டீவன்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை 3 பந்துகள் இடைவெளியில் கைப்பற்றினார் ஆரோன்.

ஆனால் 2-வது ஸ்பெல்லில் கெல்வின் ஸ்மித் (40) என்ற கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியின் சிறந்த பேட்ஸ்மெனுக்கு தனது வேகத்தினால் எட்ஜ் எடுக்க வைத்தார் வருண் ஆரோன். முதல் ஸ்லிப்பில் அது ஒரு சாதாரணமாக பிடிக்கப்பட வேண்டிய கேட்சாகவே இருந்தது ஆனால் அதனைக் கோட்டை விட்டார் ரவிச்சந்திரன் அஸ்வின். பசுந்தரை ஆட்டக்களத்தில் வருண் ஆரோனின் எகிறும் பந்துகளுக்கு முதல் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்கக் கூடிய திறமை மிக்கவர்தானா அஸ்வின் என்ற சிந்தனை ஒரு கேப்டனுக்கு இருப்பது அவசியம்.

நாளை டேவிட் வார்னர், வாட்சன், கிளார்க் போன்ற வீரர்களுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த டெய்ல் எண்டர்களுக்குக் கூட கேட்ச் விடுவது பந்து வீச்சாளர்களை தண்டிக்கும் செயல் ஆகும்.

எனவே, ஸ்லிப் பீல்டிங்கை துல்லியமாக்குவதோடு, முதலில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் ஸ்லிப்பில் எந்த தூரத்தில் எந்த கோணத்தில், நின்றால் சவுகரியமாக இருக்கும் என்பதை அறுதியிடுவது அவசியம், இதற்கு ரவிசாஸ்திரி உள்ளிட்டவர்கள் உதவி புரிய வேண்டும். முதலில் ஸ்லிப்பில் யார் யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் இவர் சரியில்லையா, அடுத்தவர் அவரும் சரியில்லையா அடுத்தவர் என்ற சிந்தனைப் போக்கு மாறுவது அவசியம். இப்படி தோனி இங்கிலாந்தில் செய்ததால்தான் கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன.

2004-ஆம் ஆண்டு இந்திய அணி கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது திராவிட், லஷ்மண் என்று அபார ஸ்லிப் பீல்டர்கள் இருந்தனர். இயன் சாப்பல், குறிப்பாக பலமான ஆஸ்திரேலிய பேட்டிங்கை பிரிஸ்பன் மைதானத்தில் 323 ரன்களுக்கு இந்தியா மட்டுப்படுத்திய போது, லஷ்மண் உள்ளிட்ட ஸ்லிப் பீல்டர்களின் பங்களிப்பை பெரிதும் பாராட்டினார்.

இந்தத் தொடரிலும் ஸ்லிப் கேட்சிங் என்பது மிகமிக முக்கியம். இதனை விடுத்து அஸ்வினைக் கொண்டு போய் ஸ்லிப்பில் நிறுத்துவது ஒரு போதும் சரியான தீர்வை அளிக்காது.

அவரவர்கள் தங்கள் சொந்த பார்மை நினைத்து கவலைப்படுவது இப்போதெல்லாம் இந்திய அணி வீரர்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. இதனால் ஸ்லிப்பில் நின்று கொண்டு அந்தப் பந்தை நானாக இருந்தால் இப்படி ஆடியிருப்பேன் அல்லது இப்படி ஆடவேண்டும் என்று யோசனை செய்து கொண்டு கவனத்தை இழக்கின்றனர். பந்துவீச்சாளர்களோ ஒரு பேட்ஸ்மெனுக்கு சில உத்திகளை வகுத்து அதற்கேற்ப களவியூகத்தையும், பந்தை எங்கு பிட்ச் செய்வது என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுகின்றனர். இவர்களை ஊக்குவித்து வெற்றியைச் சாதிக்கும் கூட்டு மனோபாவமே இந்திய அணிக்கு தேவை. இதுவே ஸ்லிப் பீல்டிங்கிலும் கேட்ச்சிங்கிலும் வெளிப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x