Published : 22 Apr 2017 09:49 AM
Last Updated : 22 Apr 2017 09:49 AM

கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணிக்கு காம்பீர், சுனில் நரேன் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. பிரவீன் குமார் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகளையும், 2-வது ஓவரை வீசிய பாக்னர் ஓவரில் 4 பவுண்டரிகளையும் விரட்டி சுனில் நரேன் அசத்தினார்.

3-வது ஓவரை வீசிய பாசில் தம்பியையும் சுனில் நரேன் விட்டுவைக்கவில்லை. இந்த ஓவரில் 2 பவுண்டரிகளுடன், ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். இதனால் கொல்கத்தா அணி 3 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சுனில் நரேன் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா தொடக்கத்தில் நிதானமாக விளையாடினார். பவர்பிளேவில் 65 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஜடேஜா வீசிய 9-வது ஓவரில் காம்பீர் சிக்ஸர் விளாசினார். இந்த ஜோடியின் சீரான ரன் குவிப்பால் 10 ஓவர்களில் 96 ரன்கள் எடுக்கப்பட்டது.

குல்கர்னி வீசிய 11-வது ஓவரில் ராபின் உத்தப்பா தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விரட்டினார். 28 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் பாக்னர் பந்தில் காம்பீர் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 114 ஆக இருந்தது. இதையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்கினார்.

பொறுமையாக விளையாடிய உத்தப்பா 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இதன் பின்னர் அவர் ரன்குவிக்கும் வேகத்தை அதிகரித்தார். பாசில் தம்பி வீசிய 18-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். உத்தப்பா அதிரடியாக விளையாடி நிலையில் மணீஷ் பாண்டே பந்துகளுக்கு நிகராகவே ரன் சேர்த்தார்.

இதனால் அணியின் ரன் விகிதத்தில் சுணக்கம் ஏற்பட்டது. பிரவீன் குமார் வீசிய 19-வது ஓவரில் உத்தப்பா ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய யூசுப் பதான் இதே ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டினார்.

பாசில் தம்பி வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த மணீஷ் பாண்டே அடுத்த பந்தில் போல்டானார். அவர் 21 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

யூசுப் பதான் 11, ஷாகில் அல்-ஹசன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி தரப்பில் பாக்னர், ரெய்னா, பாசில் தம்பி, பிரவீன் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதை யடுத்து 188 ரன்கள் இலக்குடன் குஜராத் பேட் செய்தது.

ஆரோன் பின்ச், மெக்கலம் ஜோடி அதிரடியாக விளையாடியது. 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் கவுல்டர் நைல் பந்தில் ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தார். குஜராத் அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. எனினும் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை. மெக்கலம் 27, ரெய்னா 2 ரன்களுடன் தொடர்ந்து விளையாடினார்கள். மெக்கலம் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3, இஷான் கிஷன் 4, டுவைன் ஸ்மித் 5 ரன்களில் நடையை கட்டினர். விக்கெட்கள் சரிந்த போதும் ரெய்னா அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.

கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கவுட்லர் வீசிய 17-வது ஓவரில் ரெய்னா 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரிலும் ரெய்னா சிக்ஸர் விளாசினார். 14 பந்துகளில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரெய்னா ஆட்டமிழந்தார்.

அவர் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் ஜடேஜாவும், பாக்னரும் நிதானமாக விளையாட 18.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது. ஜடேஜா 19 ரன்களுடனும், பாக்னர் 4 ரன்களுடனும் ஆட்ட மிழக்காமல் இருந்தனர். குஜராத் அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x