தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி கண்டது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.

டர்பனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இதனால் போட்டி 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முதுகுவலியால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங்குக்கு பதிலாக ரஹானேவும், முதல் போட்டியில் ஜொலிக்காத புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க அணியில் வேயன் பர்னெலுக்குப் பதிலாக வெர்னான் பிலாண்டர் இடம்பெற்றார்.

முதல் விக்கெட்டுக்கு 194

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என தோனி நினைத்தார். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆம்லாவும், டி காக்கும் சதமடித்ததோடு முதல் விக்கெட்டுக்கு 35.1 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்தினர்.

57 பந்துகளில் அரைசதம் கண்ட டி காக் 112 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 3-வது சதமாகும். தொடர்ச்சியாக 2-வது சதமடித்துள்ளார். அவர் 118 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் டிவில்லியர்ஸ் 3 ரன்களில் வெளியேற, டுமினி களம்புகுந்தார். இதனிடையே ஆம்லா தனது 12-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 117 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டேவிட் மில்லர் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே நடுவரின் தவறான தீர்ப்புக்கு பலிகடாவானார். டுமினி 26 ரன்களில் ஆட்டமிழக்க, மெக்லாரன், பிலாண்டர் ஆகியோரின் அதிரடியால் கடைசி ஓவரில் மட்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு 20 ரன்கள் கிடைத்தன.

இதனால் அந்த அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது. மெக்லாரன் 5 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 12, பிலாண்டர் 5 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சரிவுக்குள்ளான இந்தியா

281 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும், பின்னர் வந்த விராட் கோலியும் டக் அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 19, ரஹானே 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

இதன்பிறகு தோனி-ரெய்னா ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. தோனி 19 ரன்களில் வெளியேற, நீண்டநேரம் போராடிய ரெய்னா 50 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அஸ்வின் 15 ரன்களில் ஸ்டெயின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

தென் ஆப்பிரிக்காவைச் சோதித்த ஜடேஜா சோட்சோபி வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்க எல்லைக் கோட்டில் அற்புதமாகக் கேட்ச் செய்தார் டிவில்லியர்ஸ். 34 பந்துகளைச் சந்தித்த ஜடேஜா 26 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு உமேஷ் யாதவ் 1, சமி 8 ரன்களில் ஆட்டமிழக்க, 35.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in