அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நடால், கெர்பர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்; இந்தியாவின் ஷாகத் மைனேனி போராடி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நடால், கெர்பர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்; இந்தியாவின் ஷாகத் மைனேனி போராடி தோல்வி
Updated on
1 min read

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தியாவின் ஷாகத் மைனேனி கடைசி செட்டில் காயம் காரணமாக அவதிப்பட்டதால் தோல்வியடைய நேரிட்டது.

நியூயார்க் நகரில் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டி யான அமெரிக்க ஓபன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 247-வது இடத்தில் உள்ள போலந்தின் ஜெர்ஸி ஜனோவிக்ஸூடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 107-வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்தோமினை எளிதாக வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், 120-வது இடத்தில் உள்ள சுலோவேனியாவின் போலோனா ஹெர்காக்கை எதிர்கொண்டார். இதில் கெர்பர் 6-0, 1-0 என முன் னிலை வகித்தபோது ஹெர்காக் காயம் காரணமாக வெளியேறினார்.

33 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கெர்பர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தரவரிசையில் 3-வது இடத்தில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 2-6, 6-0, 6-3 என் செட் கணக்கில் 137-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். ரியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற புயர்டோ ரிகோவின் மோனிகா புயிக் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள அவர் 61-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜிஹெங் ஷாயிடம் 4-6, 2-6 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் ஷாகேத் மைனேனி தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள ஜிரி வெஸ்லியுடன் மோதினார். 143-ம் நிலை வீரரான மைனேனி இந்த ஆட்டத்தில் 6-7, 6-4, 6-2, 2-6, 5-7 என்று கடுமையாகப் போராடி தோல்வி யடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in