

ஆஸ்திரேலியாவில் இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ, தென்ஆப்பிரிக்கா ஏ, நேஷனல் பெர்பார்மன்ஸ் ஆகிய 4 அணிகள் கலந்துகொண்டுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஏ - நேஷனல் பெர்பார்மன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேஷனல் பெர்பார்மன்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம் ஹர்பர் 72 ரன்கள் சேர்த்தார். இந்தியா ஏ அணி தரப்பில் வருண் ஆரோன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
208 ரன்கள் இலக்குடன் இந்தியா ஏ பேட் செய்தது. மந்தீப் சிங் 4 ரன்னிலும், கருண் நாயர் 14, மணீஷ் பாண்டே 10 ரன்களில் வெளியேறினர். 41 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் கேதர் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.
அரை சதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேதர் ஜாதவ் 83 பங்துகளில், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாச இந்தியா ஏ அணி 38.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.