

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் அட்டவணையில் முதலிடம் பெற்றதோடு, 22 பந்துகள் மீதம் வைத்து 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வகையில் நிகர ரன் விகிதத்தையும் அதிகரித்துக் கொண்டுள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தில் 2012-லிருந்து கொல்கத்தா அணி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விரட்டும் போது இன்று வரை தோல்வி தழுவவில்லை, அதாவது ஈடன் கார்டன்ஸில் 13 வெற்றிகளைத் தொடர்ச்சியாக பெற்றுள்ளது கொல்கத்தா.
மேலும் தோல்வியுடன் டெல்லி அணி கேப்டன் ஜாகீர் கான் காயம் காரணமாக 3-வது ஓவரில் வெளியேறினார். ஜாகீர் ஓவரை கோரி ஆண்டர்சன் நிறைவு செய்தார்.
கொல்கத்தா அணி அதிரடி தொடக்க வீரர் சுனில் நரைன் (4) விக்கெட்டை ரபாடாவிடம் தொடக்கத்திலேயே இழந்தது. இவரைப்போன்ற பிஞ்ச் ஹிட்டர்களை எப்படி கையாள வேண்டுமோ அப்படிக் கையாண்டார் ரபாடா, அதிவேகமாக ஒரு பந்தை வீசினார் அது நரைனின் நிலையையே திருப்பியது பந்து ஆஃப் ஸ்டம்பை பறக்கச் செய்தது. 9/1 என்ற நிலையில் கம்பீருடன் ஃபார்மில் இருக்கும் உத்தப்பா இணைந்தார். இருவரும் இணைந்து 11 ஓவர்களில் ஓவருக்கு 9.81 என்ற ரன் விகிதத்தில் 108 ரன்களை வெளுத்துக் கட்டினர். இந்த 108 ரன்களில் கம்பீர் பங்களிப்பு 41, உத்தப்பா பங்களிப்பு 59.
ஆனால் உத்தப்பா 9 ரன்களில் இருந்த போது ரபாடா வீசிய அதிவேக ஷார்ட் பிட்ச் பந்தை உத்தப்பா புல் ஷாட் ஆட முயன்றார் ஆனால் முடியவில்லை கொடிதான் ஏற்ற முடிந்தது, ஷார்ட் ஃபைன் லெக்கிற்கும், ஸ்கொயர் லெக்கிற்கும் இடையே பந்து வானில் இருந்தது, சாம்சன், மிஸ்ரா இருவரும் பந்தைப் பிடிக்க வந்து கடைசியில் ஒருவரும் பிடிக்கவில்லை, படுமோசமான பீல்டிங். பிறகும் உத்தப்பா ரபாடாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒருஷாட்டை ஆட மிட் ஆனில் பின்னால் ஓடி பிடிக்க முயன்றார் பீல்டர் ஆனால் முடியவில்லை பவுண்டரி ஆனது.
ஒவ்வொரு போட்டியிலும் உத்தப்பா இத்தகைய வாய்ப்புகளை வழங்குகிறார், அதை விட்டால் அவர் பெரிய அளவில் ரன்களை எடுக்கிறார், இதனால்தான் இவரால் சர்வதேச கிரிக்கெட்டில் நிலைக்க முடியவில்லை, அங்கு பிடித்துப் போட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
இன்றும் அவர் கொடுத்த வாய்ப்பைக் கோட்டை விட்டதால் மோரிஸின் ஒரே ஓவரில் இரண்டு அருமையான சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று 17 ரன்களை அவர் விளாசினார். பிறகு கமின்ஸையும் டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார் உத்தப்பா. 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அவர் அரைசதம் கடந்தார். பிறகு மிஸ்ராவை லாங் ஆஃபுக்கு மேல் ஒரு செந்தூக்கு தூக்கி உத்தப்பா, கம்பீர் ஜோடி தொடர்ச்சியாக 2ம் முறை 100 கூட்டணி அமைத்தனர். 33 பந்துகளில் 59 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்த உத்தப்பா, கருண் நாயரின் அருமையான பீல்டிங் மற்றும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.
மணீஷ் பாண்டே 5 ரன்களுக்கு ரபாடாவின் 146 கிமீ அதிவேகப் பந்தில் ஸ்டம்பை இழந்தார், ரபாடா பந்து வீச்சில் நெருப்புப் பொறி பறந்தது இன்று, உத்தப்பாவுக்கு மட்டும் கேட்ச் பிடித்திருந்தால் அவர் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவை தோற்கடித்திருப்பார்.
இன்னமும் கூட இந்திய வீரர்கள் உண்மையான வேகப்பந்து வீச்சை ஆடத் திராணியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அன்று கூல்டர் நைல், உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ் கூட்டணி நட்சத்திர வீரர்கள் நிரம்பிய ஆர்சிபி-ஐ வெறும் வேகம்மூலமே 49 ரன்களுக்குச் சுருட்டியது நினைவிருக்கலாம்.
கம்பீர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்களை எடுத்தும், ஷெல்டன் ஜாக்சன் 12 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ 16.2 ஓவர்களில் 161/3 என்று கொல்கத்தா வென்றது. ஆட்ட நாயகனாக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். கம்பீர் உத்தப்பா கூட்டணி ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 சதக்கூட்டணியை அமைத்து வார்னர் -தவண் ஜோடியின் 3 சதக்கூட்டணி சாதனையை முறியடித்தனர்.
முன்னதாக டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் சில அபாரமான பவுண்டரிகள் மற்றும் அதிரடி சிக்சர்கள் மூலம் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயஸ் ஐயர் 34 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்களை எடுத்தார்.
ரிஷப் பந்த் (6), ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் விக்கெட்டுகளை மிக முக்கியமான தருணமான 16-வது ஓவரில் கூல்டர்-நைல் கைப்பற்ற கோரி ஆண்டர்சனும் ரன் அவுட் ஆக டெல்லி அணி 160 ரன்களையே எடுக்க முடிந்தது. கூல்டர் நைல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, குல்தீப், சுனில் நரைன், வோக்ஸ் ஆகியோர் சிக்கனமாக வீச 14 ஓவர்களில் 123/1 என்று இருந்த டெல்லி 20 ஓவர்களில் 160/6 என்று சரிவடைந்தது. இந்த தோல்வி மூலம் டெல்லி அணி கடைசி இடத்துக்குச் சென்றது. கொல்கத்தா 14 புள்ளிகளுடன் +1.223 என்ற நிகர ரன் விகிதத்துடன் முதலிடம் வகிக்கிறது.