

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் 5 பேட்ஸ்மென்கள் அரைசதம் கண்டனர். ஆட்டம் டிரா ஆனது.
அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில், 55/1 என்று இருந்த இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் (51), புஜாரா (55) ஆகியோர் அரைசதம் எடுத்தவுடன் ரிட்டையர்டு அவுட் ஆயினர்.
விராட் கோலியும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் 114 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா அதிரடி முறையில் 49 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்களை எடுக்க, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 75 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
மிகப்பெரிய விஷயம் என்னவெனில், லெக் ஸ்பின்னர் கரன் சர்மா, 54 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
புஜாரா மிக அழகாக ஆடினார். 80 பந்துகளில் அவர் 11 அழகான பவுண்டரிகளை அடித்தார். தவன் நேற்று ஏமாற்றமளிக்க இன்று அஜிங்கிய ரஹானே 1 ரன் எடுத்து 16-வயது ஆஃப் ஸ்பின்னர் சாம் கிரிம்வேட் என்பவரிடம் அவுட் ஆனார். மிட் ஆஃபில் ரயான் கார்ட்டர்ஸ் அபாரமான டைவிங் கேட்சை பிடித்தார்.
தோனி இடத்தில் சஹா முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது. அணித் தேர்வு கடினமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
முரளி விஜய், ஷிகர் தவன், புஜாரா, கோலி, ரஹானே, ரெய்னா, கரன் சர்மா, இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், வருண் ஆரோன், மொகமது ஷமி என்று இந்திய அணி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெய்னாவுக்கு பதில் ரோஹித் சர்மா வேண்டுமானால் இடம்பெறலாம். பிரிஸ்பன் பிட்ச் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கரன் சர்மாவுக்குப் பதில் உமேஷ் யாதவ் கூட தேர்வு செய்யப்படலாம்.
ஆனால், கோலியும், அணி நிர்வாகமும் என்ன முடிவு செய்யும் என்று டிச.4-ஆம் தேதியே தெரியவரும்.