

ரஞ்சி கிரிக்கெட்டில் பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட் செய்து, 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழகம் 233 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பரோடா அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்ட நேர முடிவில் பரோடா 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. திங்கள்கிழமை ஒருநாள் மட்டுமே ஆட்டம் எஞ்சியிருந்ததால் ஆட்டம் டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் பரோடா அணி திங்கள்கிழமை கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. 91 ரன்களை எட்டியபோது வான்மோடின் விக்கெட்டை பரோடா இழந்தது.
பின்னர் வந்த பரோடா வீரர்கள் தமிழக பந்து வீச்சாளர்கள் எம்.ரங்கராஜன், சீனிவாஸ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் சுருண்டனர். 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடனும், 4 வீரர்கள் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். பரோடா அணி 2-வது இன்னிங்ஸில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் மேலும் 55 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு தமிழக அணிக்கு கிடைத்தது. 14.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களை எடுத்து தமிழகம் வென்றது. தமிழக வீரர் எம். ரங்கராஜன் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரஞ்சி கோப்பையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழகம் பெற்றுள்ள முதல் வெற்றி இது. மொத்தம் 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள தமிழகம் 4 போட்டிகளை டிரா செய்துள்ளது. பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது.