

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது.
பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா 202 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணி 145 ஓவர்களில் 606 ரன்கள் குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அபராஜித் 42, தினேஷ் கார்த்திக் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
4-வது நாளான புதன்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் அபராஜித்-தினேஷ் கார்த்திக் ஜோடி சிறிது நேரம் நிலைத்தது. தினேஷ் கார்த்திக் 27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சரிவுக்குள்ளானது. பின்னர் வந்த மன்தீப் சிங் 2, அமித் மிஸ்ரா 5, கேப்டன் ஹர்பஜன் சிங் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு 58-வது ஓவரை வீசிய கர்நாடக சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால், ரெஸ்ட் ஆப் இந்தியாவின் அபராஜித், அசோக் திண்டா, பங்கஜ் சிங் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 57.5 ஓவர்களில் 183 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அபராஜித் 66 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டு கள், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய கர்நாடக கேப்டன் வினய் குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
புதன்கிழமை 30-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கர்நாடக கேப்டன் வினய் குமாருக்கு இரானி கோப்பை பரிசாக அமைந்தது. இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 10-வது முறையாக 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் வினய். லெக் ஸ்பின்னர் கோபால் 8-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
கடந்த 9 சீசன்களில் முதல்முறையாக இரானி கோப்பையை வென்ற ரஞ்சி சாம்பியன் என்ற சாதனையையும் கர்நாடகம் படைத்தது. முன்னதாக கர்நாடகம், மகாராஷ்டிரத்தை வீழ்த்தி ரஞ்சி கோப்பையை வென்றது. இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய கர்நாடகம் 8 வெற்றிகளோடு சீசனை நிறைவு செய்துள்ளது.