Published : 22 Feb 2014 10:40 AM
Last Updated : 22 Feb 2014 10:40 AM

தென் ஆப்பிரிக்கா 423 ரன்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 150.5 ஓவர்களில் 423 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

டிவில்லியர்ஸ் 116 ரன்களும், ஜே.பி.டுமினி 123 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 83 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. டிவில்லியர்ஸ் 51, டுமினி 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸும் டுமினியும் தொடர்ந்து சிறப்பாக ஆட 108.2 ஓவர்களில் 300 ரன்களைக் கடந்தது. டுமினி 108 பந்துகளில் அரைசதமடிக்க, அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் 201 பந்துகளில் சதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 19-வது சதமாகும்.

தென் ஆப்பிரிக்கா 349 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 232 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்து நாதன் லயன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த வெர்னான் பிலாண்டர் 6 ரன்களில் ஆட்டமிழக்க, வேயன் பர்னெல் களம்புகுந்தார்.

இதனிடையே மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஜே.பி.டுமினி 199 பந்துகளில் சதமடித்தார். இதன்பிறகு பர்னெல் 10 ரன்களில் வெளியேற, டுமினி 231 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக மோர்ன் மோர்கல் 1 ரன்னில் ரன்அவுட்டாக தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 423 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா-42/3

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 28 ரன்களுடனும், கேப்டன் கிளார்க் ரன் ஏதுமின்றியும் விளையாடிக் கொண்டிருந்தனர். முன்னதாக கிறிஸ் ரோஜர்ஸ் 5 ரன்களிலும், டூலன் 8 ரன்களிலும், ஷான் மார்ஷ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x