ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்ததால் ரூ.11 கோடி, அரசு வேலை, வீடு, கார்: பரிசு மழையில் நனைகிறார் பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்ததால் ரூ.11 கோடி, அரசு வேலை, வீடு, கார்: பரிசு மழையில் நனைகிறார் பி.வி.சிந்து
Updated on
2 min read

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன. தெலங் கானா அரசு ரூ.5 கோடி, ஆந்திரா அரசு ரூ.3 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளதுடன் வீட்டு மனை, அரசு பணி வழங்கப்படும் என தெரிவித் துள்ளன. டெல்லி மாநில அரசு சார்பிலும் சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள் ளது.

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமானது. இதுதவிர இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் 21 வயதான சிந்து தட்டிச் சென்றுள்ளார். சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-வது பதக்கத்தை பெற்றுள்ளது.

தெலங்கானா ரூ.5 கோடி

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து பரிசு மற்றும் பாராட்டு மழையில் நனைந்து வரு கிறார். அவருடைய சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் அவருக்கு ரூ.5 கோடி மற்றும் அரசு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை தேடி தந்துள்ள பி.வி.சிந்துவை மனதார பாராட்டுகிறேன். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது. அந்த அளவுக்கு அவர் தங்கப் பதக்கம் வெல்ல கடினமாக போராடினார்.

இதுபோன்ற இளம் வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத் துவது அரசின் கடமையாகும். ஆதலால் பி.வி.சிந்துவுக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகையும், ஹைதராபாத்தில் 1,000 சதுர அடியில் வீட்டு மனைப்பட்டாவும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் செய்யப்பட்டது.

மேலும் அவர் விரும்பும் அரசு பணி வழங்கவும் தெலங்கானா அரசு தீர்மானித்துள்ளது. இதேபோன்று பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்ற சாக் ஷி மாலிக்குக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

வரும் செப்டம்பர் 2-ம் தேதி தாயகம் திரும்பும் பி.வி. சிந்துவுக்கும், அவரது பயிற்சியாளர் கோபிசந்துக் கும் ஹைதராபாத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கவும், அதனை கோலாகல விழாவாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார்.

ஆந்திரா ரூ.3 கோடி

இதற்கிடையே ஆந்திர அரசு ரூ.3 கோடி பரிசுத்தொகையுடன், அரசு வேலையும் பி.வி.சிந்துவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்த பி.வி சிந்துவுக்கும், அவரது பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சிந்துவுக்கு ஆந்திர அரசு சார்பில் குரூப் 1 அளவில் அரசு வேலை வழங்க வேண்டுமென்றும், ரூ.1 கோடி பரிசு மற்றும் அமராவதி யில் வீட்டு மனையும் வழங்குவ தென்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவலை அரசு சார்பில் ஒரு கடிதம் மூலம் சிந்துவின் பெற்றோ ருக்கு வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

இதுதவிர இந்திய பாட்மிண்டன் சங்கம் சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.10 லட்சமும் வழங்குகிறது. மத்தியப் பிரதேசத்தின் சார்பில் சிந்துவுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்க தலைவர் சாமுண்டீஸ்வரநாத், பி.எம்.டபிள்யூ காரை சிந்துவுக்கு பரிசளிக்கிறார். இதுதவிர சிந்துவுக்கு, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் எஸ்யூவி கார் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே சிந்துவுக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதேபோல டெல்லி அரசு சார்பாக சாக் ஷி மாலிக்குக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு

பி.வி.சிந்து தற்போது ஹைதராபாத் தில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு துணை மேலாளர் பதவி உயர்வும், ரூ.75 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகை விவரம்

தெலங்கானா: ரூ.5 கோடி

ஆந்திரா: ரூ.3 கோடி

டெல்லி: ரூ.2 கோடி

மத்தியப் பிரதேசம்: ரூ.50 லட்சம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம்: ரூ.75 லட்சம்

இந்திய பாட்மிண்டன் சங்கம்: ரூ.50 லட்சம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in