Published : 09 Mar 2017 04:01 PM
Last Updated : 09 Mar 2017 04:01 PM

ராஞ்சியில் 3-வது டெஸ்ட்: பிட்ச் தயாரிப்பில் அக்கறை காட்டும் தோனி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னாள் கேப்டன் தோனி அக்கறை காட்டுவதாக ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

தனது சொந்த மாநிலத்தில் இந்த டெஸ்ட் நடைபெறுவதால் அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் தோனி தீவிர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் தெரிவித்ததாவது:

தோனி பிட்ச் நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் அக்கறை காட்டி வருகிறார். ஸ்டேடியத்திற்கு தோனி அடிக்கடி வந்து தயாரிப்புகள் பற்றி பார்வையிடுகிறார், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சிலபல பரிந்துரைகளையும் அளித்தார்.

அவர் கொல்கத்தா சென்ற போதும் கூட எங்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். அதாவது பிட்ச் தயாரிப்பாளர் உள்ளிட்டோருடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒரு டெஸ்ட் போட்டியாக அமைய வேண்டும் என்பதில் தோனி சீரிய ஆர்வமும், அக்கறையும் காட்டி வருகிறார்.

இவ்வாறு கூறினர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி.

இதற்கிடையே ராஞ்சி பிட்ச் தயாரிப்பாளர் எஸ்.பி.சிங் கூறும்போது, இந்தப் பிட்சில் 5 நாட்கள் விறுவிறுப்பான கிரிக்கெட்டை எதிர்பார்க்கலாம் என்று கூறியதோடு, ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், பேட்ஸ்மென்களுக்கும் சாதகமான பல அம்சங்கள் உள்ளன, அவர்களும் பேட்டிங்கை மகிழ்வுடன் ஆடலாம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x