Last Updated : 15 Jun, 2016 11:15 AM

 

Published : 15 Jun 2016 11:15 AM
Last Updated : 15 Jun 2016 11:15 AM

பனாமாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா காலிறுதியில் சிலி

கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியில் பனாமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சிலி அணி காலிறுதிக்கு முன்னேறியது.

எட்வர்டோ வார்கஸ், அலெகிஸிஸ் சான்சேஸ் ஆகிய சிலியின் முன்னணி வீரர்கள் ஆகியோர் தலா 2 கோல்களை அடிக்க 4-2 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதியில் சிலி அணி மெக்சிகோ அணியைச் சந்திக்கிறது. பனாமா வெளியேறியது.

இந்தப் போட்டியில் பனாமா வெற்றி பெற்றிருந்தால் காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் என்ற சூழலில் ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் மிகுவெல் கேமர்கோவின் ஒரு நீண்ட தூர ஷாட் சிலி கோல் கீப்பர் கிளாடியோ பிராவோவின் மீது பட்டு கோல் ஆனது. பனாமா 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஆனால் இந்த முன்னிலை அதிக நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. பனாமா கோல் பகுதிக்குள் சிலி வீரர் அலெக்சிஸ் சான்சேசுக்கு சுதந்திர வெளி கிடைக்க இவர் அடித்த ஷாட் ஜெய்மி பெனீடோவால் தள்ளி விடப்பட அது நேராக சிலி வீரர் எட்வர்டோ வார்கஸ் பாதையில் வந்தது அவர் அதனை கோலாக மாற்றினார் 1-1 என்று சமன் ஆனது.

இதே வார்கஸ் ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ழான் பியூஸ்ழோர் என்பவர் அடித்த துல்லியமான கிராஸை தலையால் முட்டி 2-வது கோலை அடித்தார்.

50-வது நிமிடத்தில் வார்கஸின் கிராஸ் ஒன்றை சான்சேஸ் அற்புதமாக கோலாக மாற்ற 3-1 என்று சிலி முன்னிலை பெற்றது. 75-வது நிமிடத்தில் பனாமாவின் பதிலி வீரர் அப்டியல் அரோயோ தலையால் முட்டி ஒரு கோலை அடிக்க 3-2 என்று சற்றே விறுவிறுப்பானது.

பனாமா அணி மேலும் தனது 2 கோல்களுக்கான முயற்சியில் தோல்வி அடைந்தது. கடைசி வரை பந்தைக் கொண்டு செல்ல முடியவில்லை, அல்லது நீண்ட தூர கோல் முயற்சி, அல்லது கோலை நோக்கி அடிக்கும் பாஸ் முயற்சிகள் அனைத்தும் சிலி வீரர்கள் காலில் நேராக சிக்கியது என்று பனாமாவுக்கு எதுவும் லபிக்கவில்லை.

இந்நிலையில் 89-வது நிமிடத்தில் சிலியின் லாங் ரேஞ்ச் பாஸ் ஒன்று பனாமா கோல் அருகில் வர சிலபல கடைதல்களுக்குப் பிறகு பந்து காற்றில் வர சான்சேஸ் அதனை தலையால் முட்டி 4-வது கோலை அடித்தார். பனாமா வெளியேறியது.

மெக்சிகோவை ஜூன் 18-ம் தேதியன்று காலிறுதியில் சந்திக்கிறது சிலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x