Published : 24 Nov 2013 10:20 AM
Last Updated : 24 Nov 2013 10:20 AM

இன்று 2-வது ஒருநாள் போட்டி தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியோ வாழ்வா, சாவா ஆட்டத்தில் களம் காண்கிறது. அந்த அணி இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

இந்திய அணி ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகின்றனர்.

பந்துவீச்சில் முகமது சமி, புவனேஸ்வர் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்கள் தவிர பகுதி நேர பந்துவீச்சாளரான ரெய்னாவும் கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய கேப்டன் தோனி வெற்றிக் கூட்டணியை மாற்ற விரும்பமாட்டார் என்பதால் இந்தப் போட்டியை பொறுத்தவரையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டால், கடந்த போட்டியில் 6 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்த உனட்கட்டுக்குப் பதிலாக மோஹித் சர்மா சேர்க்கப்படலாம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலும் தடுமாறி வரும் நிலையில், தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சார்லஸ், மார்லான் சாமுவேல்ஸ், டேரன் பிராவோ, கேப்டன் டுவைன் பிராவோ என சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இருந்தபோதும், டேரன் பிராவோவைத் தவிர யாரும் பார்மில்லை. தொடர்ந்து சொதப்பி வரும் டெஸ்ட் கேப்டன் முகமது சமி இந்த ஆட்டத்தில் நீக்கப்படலாம் என தெரிகிறது. அந்த அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. எனவே இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த மேற்கிந்தியத் தீவுகளின் பௌலர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

மைதானம் எப்படி?

இந்த மைதானத்தில் 2005 முதல் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி கண்டுள்ளது. கேப்டன் தோனிக்கு இது ராசியான மைதானம் ஆகும். 2005-ல் இங்கு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றித் தேடித்தந்துள்ளார்.

போட்டி நடைபெறும் விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது என்றாலும், ஹெலன் புயல் காரணமாக அங்கு கடந்த இரு நாள்களாக மழை பெய்திருப்பதால் மைதானம் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் போட்டிக்கு மழையால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை அங்கு வெயில் அடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x