

ஜூடோ, கராத்தே, தடகளம், ஸ்கேட்டிங், நீச்சல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமின்றி பரத நாட்டியம், அபாகஸ் என எந்தத் துறையை எடுத்தாலும் அவையனைத்திலும் முத்திரைப் பதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 11 வயது அனந்த லட்சுமி. சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் கொலம்பன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்து வரும் அனந்த லட்சுமி, பள்ளிகள் இடையிலான போட்டிகள், மாநில அளவிலான சப் ஜூனியர் மற்றும் கராத்தே போட்டிகள் உள்ளிட்டவற்றில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்திருக்கிறார்.
வீடு முழுக்க அனந்த லட்சுமி வென்ற பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப் அகாதெமியில் தடகளப் பயிற்சிக்காக சனிக்கிழமை காலையில் வந்தவரை சந்தித்தோம். குழந்தை முகம் மாறாத அன்னலட்சுமி தனக்கே உரிய குறும்புத்தனத்தோடு இளம் கன்று பயமறியாது என்பதைப்போல் சடசடவென பேசுகிறார்.
அப்பா சீனிவாசன், அம்மா ஜெயலட்சுமி இருவரும் விளையாட்டின் மீது அதீத ஆர்வமுள்ளவர்கள். அதனால் இளம் வயதிலேயே அனந்த லட்சுமிக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டதில் வியப்பில்லை. ஆனால் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கே நேரம் போதாத இயந்திரமயமான உலகில் அட்டவணை போட்டு 5-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளிலும், பாரத நாட்டியம் போன்ற பாரம்பரியக் கலைகளிலும் ஜொலித்து வரும் இந்த குட்டி அனந்த லட்சுமியைப் பார்க்கும்போது சற்று வியப்பாகவே இருக்கிறது. இதுதவிர சினிமாவிலும் கால் பதித்திருக்கிறார்.
தங்கக் கனவு
ஜூடோவில் பச்சை பட்டையும் (பெல்ட்), கராத்தேவில் கறுப்பு பட்டையும் பெற்றிருக்கும் அனந்த லட்சுமி, பாரத நாட்டியத்தில் 4-ம் நிலையான சப்தம் வரை தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஜூடோவில் மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டிகளில் இரு பதக்கங்களை வென்றுள்ள அனந்துவின் அடுத்த இலக்கு தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் ஜூடோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதுதான்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இன்று வரை தமிழக வீரர்கள் யாரும் தேசிய அளவிலான ஜூடோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த குறையை என்னால் போக்க முடியும் என நம்புகிறேன். எனது இலக்கு தங்கப் பதக்கத்தை நோக்கித்தான் பயணித்து கொண்டிருக்கிறது. எனது பயிற்சியாளர்களான ஜூடோ மாஸ்டர்கள் உமா சங்கர், சதீஷ் மற்றும் தமிழ்நாடு ஜூடோ சங்க செயலர் சதீஷ் குமார் ஆகியோர் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்து வருகிறார்கள். அதனால் நிச்சயம் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பேன்.
அதன்பிறகு சர்வதேச அளவிலான போட்டிகளிலும், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வேண்டும். ஜூடோவில் எனது உச்சக்கட்ட இலக்கு ஒலிம்பிக் போட்டிதான். இப்போது எனக்கு 11 வயதுதான் ஆகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் வலுவான வீராங்கனையாக உருவெடுத்து நிச்சயம் ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதிக்க முடியும் என நம்புகிறேன்” என்று கூறும்போது அவர் கண்களில் நம்பிக்கை மின்னுவதைக் காண முடிகிறது.
தடகளத்தில் 400 மீ. ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதலில் பங்கேற்று வரும் அனந்த லட்சுமி, “100 மீ., 200 மீ., ஓட்டங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். எனது பயிற்சியாளர் நாகராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதனால் விரைவில் 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் தடம்பதிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றார்
ஐபிஎஸ் ஆர்வம்
ஜூடோவில் தனது ரோல் மாடல் கரிமா சௌத்ரி என்று கூறிய அனந்த லட்சுமி, “ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஒரு போட்டியின் பரிசளிப்பு விழாவின்போது தமிழக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபுவை சந்தித்தேன். அவரிடம் பேசிய அந்தத் தருணத்திலேயே நாமும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு எனக்குள் வந்தது. அது முதலே காவல் துறை அதிகாரிகளைப் பார்த்தால் அவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு அவர்களிடம் துணிச்சலாகப் பேசுகிறேன்” என்றார்.
சினிமா பயணம்
திரைத்துறை அனுபவம் பற்றி பேசிய அனந்த லட்சுமி, “ஆசைப்படுகிறேன், இவன் என்ற இரு திரைப்படங்களிலும், வீட்டுக்கணக்கு, பிடாரன், பரிசு ஆகிய குறும்படங்களிலும், “லாஸ்ட் பாரடைஸ்” என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கிறேன். மற்றொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளேன். அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனாலும் ஜூடோவுக்கே முன்னுரிமை. எனது விளையாட்டுப் பயிற்சியை பாதிக்காத வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சினிமாவில் நடிக்கிறேன் ” என்றார்.
அனந்த லட்சுமியின் தாய் ஜெயலட்சுமி, சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்று 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றிருக்கிறார். அனந்த லட்சுமியின் மூத்த சகோதரிகளான பிரியங்கா தடகள வீராங்கனை, கரிஸ்மா எறிபந்து வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.