

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடை பெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி ஐரோப்பிய நாடு களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது.
முதல் பயிற்சி ஆட்டம் இன்று போர்ச்சுக்கலில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விட்டோரியா டி செட்பால் கிளப் அணியுடன் மோதுகிறது. இதைத் தொடர்ந்து 25-ம் தேதி பிலென்சஸ், 27-ம் தேதி பென்பிகா, மே 1-ம் தேதி எஸ்டோரில், மே 5-ம் தேதி பென்பிகா, மே 9-ம் தேதி ஸ்போர்டிங் கிளப் போர்ச்சுகல் ஆகிய அணிகளுடன் இந்தியா மோத உள்ளது.
போர்ச்சுக்கலில் பயிற்சி ஆட்டங்களை முடித்துவிட்டு பிரான்சில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கலந்து கொள்கிறது. அங்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.
போர்ச்சுக்கலைச் சேர்ந்த லூயிஸ் நார்டன் டி நார்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். போர்ச்சுக்கலை தொடர்ந்து இந்திய அணி பிரான்ஸ், இத்தாலி, ஹங்கேரியில் உள்ள அணிகளுடனும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.
லூயிஸ் நார்டன் கூறும்போது, ‘‘அகில இந்திய கால்பந்து சங்கத்தின் முயற்சியை பாராட்டுகிறேன். இந்த பயிற்சி ஆட்டங்களால் உலகக் கோப் பைக்கான சிறந்த வீரர்களைத் தேர்வு முடியும்’’ என்றார்.