

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்தது.
நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் பின்தங்கிய போதே, முதலிடத்தை இந்தியா இழந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவுடனான 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் இந்தியா முதலிடத்துக்கு வந்தது.
இந்நிலையில், மீண்டும் தன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பறி கொடுத்துள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தால் மட்டுமே இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.
ஆஸ்திரேலியா தற்போது 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவும் 117 புள்ளிகள் பெற்றுள்ள போதும், சில டெசிமல் புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளதால் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது.
அடுத்த இரு போட்டிகளையும் இந்தியா வென்றால், 118 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம். மாறாக ஒரு போட்டியில் தோற்றாலும் 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தான் நீடிக்க வேண்டும். இரு போட்டிகளிலும் தோற்றால் 115 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கலாம்.