Published : 22 Jun 2016 12:08 PM
Last Updated : 22 Jun 2016 12:08 PM

பிளன்கெட் அடித்த கடைசி பந்து சிக்ஸ்: டை ஆன இலங்கை - இங்கிலாந்து போட்டி

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் 286 ரன்கள் ஸ்கோரை விரட்டிய இங்கிலாந்து அணி பிளன்கெட் அடித்த பரபரப்பான கடைசி பந்து சிக்ஸரினால் 286 ரன்கள் எடுக்க போட்டி அரிதான முறையில் ‘டை’ ஆகி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இங்கிலாந்தின் கடைசி வீரர் பிளன்கெட் இறங்கும்போது இங்கிலாந்து வெற்றி பெற 26 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை வெற்றி பெற்றிருக்க வேண்டும் இப்போதே, ஆனால் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் என்பதாக நிலைமை மாறியது.

கிரீசில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் நின்று கொண்டிருந்தனர், இருவரும் 49-வது ஓவரில் பவுண்டரிகள் அடித்து 16 ரன்களைச் சேர்த்தனர். கடைசி ஓவரின் முதல் 5 பந்துகளில் 7 ரன்களை இருவரும் எடுத்தனர், கடைசி பந்தில் டை செய்ய 6 ரன்கள் தேவை. நுவான் பிரதீப் கடைசி பந்தை சற்றே ஷார்ட்டாக வீச லியாம் பிளன்கெட் நேராக பவுலர் தலைக்கு மேல் சக்தி வாய்ந்த சிக்சை அடிக்க ஆட்டம் டை ஆனது.

இங்கிலாந்தை ஒரு விதத்தில் இலங்கை ஆடவிட்டது என்றே கூற வேண்டும், காரணம் ஜேசன் ராய், ஹேல்ஸ், ஜோ ரூட், மோர்கன் (43), மொயின் அலி ஆகியோர் பெவிலியன் திரும்ப 18-வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 82/6 என்று தோல்வி முகம் காட்டியது.

அதன் பிறகு 7-வது விக்கெட்டுக்காக சாதனைக் கூட்டணி அமைத்த கிறிஸ் வோக்ஸ் (95 நாட் அவுட்), ஜோஸ் பட்லர் (93) ஆகியோர் 7-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்த்தனர். 149 பந்துகளில் 138 ரன்கள் சேர்க்கப்பட்டது, 7-வது விக்கெட்டுக்காக இது 2-வது அதிக ரன் கூட்டணியாகும்.

ஜோஸ் பட்லர் 30/4 என்ற நிலையில் களமிறங்கினார், நிதானமாகத் தொடங்கி 99 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்து சீகூகே பிரசன்னாவிடம் ஆட்டமிழந்தார், ஷனகா பிடித்த கேட்ச் அருமையானது. கிறிஸ் வோக்ஸ் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார். லியாம் பிளன்கெட் 11 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்ததோடு, டை-யிற்கான சிக்ஸரையும் அடித்தார்.

ஆஞ்சேலோ மேத்யூஸ் பேட்டிங்கில் நிதானமான 73 ரன்களை எடுத்து அணியை கரை சேர்த்ததோடு, ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகிய அபாயகரமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பேட்டிங்கில் இலங்கை அணி 56/3 என்று 8.4 ஓவர்களில் தடுமாறியது. சந்திமால் 37 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா (24), மெண்டிஸ் (17) ஆகியோர் தொடங்கி பிறகு ஆட்டமிழந்தனர். சந்திமால் ஆட்டமிழந்த பிறகு நடுவில் ஒரு 8 ஓவர்கள் சீகூகே பிரசன்னாவின் அனாயசமான அதிரடியைக் காணமுடிந்தது, ஒரு புறம் ரன்களே வராமல் இருந்த நிலை போக இவர் இறங்கியவுடன் தாறுமாறு அடியாக மாறிப்போனது, அன்று ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் தவறவிட்ட சீகுகே நேற்று முதல் 16 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார், ஆனால் அதன் பிறகு 12 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். அதிர்ச்சியூட்டும் அதிரடி.

அதாவது 28 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார், மொத்தம் 56 ரன்கள் ஓடவேண்டிய தேவையில்லாமல் பவுண்டரிகளாக்வே வந்தது. மொயின் அலி, பிளென்கெட் வீசிய ஒரு 5 பந்துகளில் 4 சிக்சர்கள். அந்தத் தருணத்தில் 3 ஓவர்களில் இலங்கை 49 ரன்கள் விளாசியது, எங்கிருந்தோ வந்தார் இதுதாண்டா நான் என்றார் சீகுகெ பிரசன்னா. ஒரு காலத்தில் அரவிந்த டிசில்வா இப்படித்தான் நம்பமுடியாத அதிரடி ஆட்டம் ஆடுவார்.

இலங்கை அணி ஷனகாவின் 20 ரன்களுடனும், மஹரூஃபின் 31 ரன்களுடனும் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x