விளையாட்டுச் செய்தித் துளிகள் - 21/03/14

விளையாட்டுச் செய்தித் துளிகள் - 21/03/14
Updated on
1 min read

ஜூனியர் ஹாக்கி: அரையிறுதியில் ஒடிசா

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் ஹாக்கி ஏ டிவிசன் போட்டியில் ஒடிசா, மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

பி பிரிவில் இடம்பெற்றுள்ள மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமி அணி, வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் போபால் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்த மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமி அரையிறுதியை உறுதி செய்தது.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஒடிசா அணி 4-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8-0 என்ற கோல் கணக்கில் பிஹாரை தோற்கடித்தபோதும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ஹரியாணா, ஜார்க்கண்டையும், ஒடிசா, மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமி அணியையும் சந்திக்கின்றன.

உலக ஸ்குவாஷ்: தீபிகா பலிக்கல் தோல்வி

மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்று வரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் தோல்வி கண்டார்.

வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவரான தீபிகா பலிக்கல், சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரான எகிப்தின் ரனீம் எல் வெய்லியிடம் தோல்வி கண்டார்.

2011-ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தீபிகா பலிக்கல் காலிறுதி வரை முன்னேறினார். இன்றளவும் உலக சாம்பியன்ஷிப்பில் தீபிகாவின் சிறந்த போட்டி அதுதான். இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா முதல் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை: காஷ்யப் முன்னேற்றம்

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் காஷ்யப் 2 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் சர்வதேச தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார் காஷ்யப்.

அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த், ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் மற்றும் ஸ்விஸ் ஓபன் போட்டிகளில் முதல் சுற்றோடு வெளியேறியதன் எதிரொலியாக 2 இடங்களை இழந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் சாய்னா, சிந்து ஆகியோர் தங்களின் தரவரிசையை தக்கவைத்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் முறையே 8 மற்றும் 9-வது இடங்களில் உள்ளனர். அதேநேரத்தில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் முதல் 25 இடங்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in